ஓமலூர் அருகே தனியார் மருத்துவமனை ஸ்கேன் மைய உரிமம் ரத்து: மருத்துவமனை நிர்வாகி கைது

சேலம் மாவட்டம்,  ஓமலூர் அருகே  தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஸ்கேன் மையத்தில் சுகாதாரத் துறை

சேலம் மாவட்டம்,  ஓமலூர் அருகே  தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஸ்கேன் மையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஸ்கேன் மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அதன் நிர்வாகியும் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர் அருகேயுள்ள கருப்பூரில் தனியாருக்குச் சொந்தமான மருத்துவமனை உள்ளது.  இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு  அல்ட்ரா ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. இந்த நிலையில், அரசு விதிமுறைகளை மீறி இந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையத்தில்  கருவில் உள்ள பாலினம் குறித்து தெரிவிப்பதாக மருத்துவத் துறைக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை துணை இயக்குநர் வளர்மதி, குழுக் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன்,  மருத்துவத்துறையின் போலீஸ் டி.எஸ்.பி. தாமஸ்பிரபாகர், சேலம் மாவட்ட குடும்ப நலம்,  ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சத்யா மற்றும் மருத்துவ ஆய்வுக் குழுவினர் தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை  திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கடந்த 11 மாதங்களாக ஸ்கேன் விவரம், சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்கள்  குறித்து ஆய்வு நடத்தினர்.  இந்த  ஆய்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன.  இதனைத் தொடர்ந்து, ஸ்கேன் கருவி மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து, மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கான உரிமத்தை ரத்து செய்தனர். மேலும்,  மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் வித்யாசாகரை கைது செய்து, சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து,  சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சத்யா கூறும்போது,  கருப்பூரில் உள்ள ஸ்கேன் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது.  அதில், ஸ்கேன் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை முறையாகப் பராமரிக்கப்படாதது,  பாலினம் குறித்து விவரம் தெரிவிப்பது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விதிமுறையை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com