காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்:  ஈ.ஆர்.ஈஸ்வரன்

காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.

காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.
மேட்டூர் உபரிநீர் திட்டம், காவிரி, திருமணிமுத்தாறு, கோதையாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு,  மேட்டூர் உபரி நீர்த் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும், தோணி மடுவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும், திருமணி முத்தாறு கோதையாற்றை இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஏரிகளைத் தூர்வாரிட  வேண்டும் என்றும், கொங்கு மண்டலத்தில் உள்ள ஏரிகளை இணைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது: 
கொங்கு மண்டல வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.  குறிப்பாக, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மத்திய பல்கலைக்கழகம் கொங்கு மண்டலத்தில் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.  
இதுதவிர, அரசிடம் கோரிக்கையும் முன்வைத்துள்ளோம்.  ஆனால்,  அரசு, இதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  வளர்ச்சித் திட்டப் பணிகளை பொருத்தவரை கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகிறது.
காவிரி உபரி நீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது.  ஆனால், சேலம் மாவட்ட மக்கள் குடிக்க நீர் இன்றி தவிக்கின்றனர்.  காவிரி உபரிநீரை தேக்கி வைப்பதற்கு குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன.  காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கடந்த 50 ஆண்டு காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
மேலும்,  மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றுவதாகவும், தோணி மடுவு திட்டத்தை நிறைவேற்றுவதாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே அரசு தெரிவித்து உள்ள நிலையில்,  8 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் தங்கவேல்,  விவசாய அணிச் செயலாளர் சந்திரசேகர், மாநகர மாவட்டச் செயலாளர் லோகநாதன், மாவட்டச் செயலாளர்கள் ரமேஷ், கோவிந்தராஜ், செங்கோடன், ராஜ்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com