சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய தரமதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்று 6 வகையான இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலைப் பாடங்களை அளித்து வருகிறது.
தேசிய அளவிலான தரப்பட்டியலில் இடம்பிடிக்கும் வகையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி குறித்த விவரங்களுடன் அண்மையில் தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழு இரு நாள்கள் இக்கல்லூரியில் ஆய்வு மேற்கொள்கிறது. இதற்காக காக்கிநாடா ஜவகர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வி.எஸ்.எஸ். குமார் தலைமையிலான குழுவினர் வந்தனர்.
அவருடன் இந்தூர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி பிரதோஷ் பன்சால், ரூர்கி ரயில்வே பொறியியல் கல்லூரி பேராசிரியர் சதீஷ் சி.சர்மா ஆகியோர் அடங்கிய குழுவினருக்கு தேசிய மாணவர் படையினர் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, அரசு பொறியியல் கல்லூரியின் சாதனைகளை, கல்லூரி முதல்வர் ஜி. விமலா ரோஸ்லின் குழுவிடம் விளக்கினார். பின்னர், துறை வாரியாக ஆய்வு மேற்கொண்ட குழுவினர், ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து பேராசிரியர்களிடம்  கேட்டறிந்தனர். மேலும், கல்லூரியில் செயல்பட்டு மாணவ-மாணவியர் விடுதியைப் பார்வையிட்ட குழுவினர் விளையாட்டு மைதானம், நூலகம், டிஜிட்டல் நூலகத்தையும் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், தற்போது கல்வி பயிலும் மாணவ-மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்களை தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழுவினர் கருத்துகளை தனித்தனியே கேட்டறிந்தனர். 
இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு தேசிய அளவிலான அந்தஸ்து கிடைக்கும். ஆய்வின்போது, துணை முதல்வர் விஜயன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com