வாழப்பாடி ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, பூப்பெய்தாத சிறுமிகள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, பூப்பெய்தாத சிறுமிகள் மற்றும் சுமங்கலிப் பெண்களை தெய்வமாக பாவித்து பாத பூஜை செய்து வழிபடும் சோடஷ பூஜை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவையொட்டி, பல்வேறு சிற்பங்களுடன் கொலு அமைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது. நிகழாண்டு நவராத்திரி விழாவையொட்டி, பூப்பெய்தாத சிறுமியர் மற்றும் சுமங்கலிப் பெண்களை தெய்வமாக பாவித்து, அவர்களுக்கு புத்தாடை, வளையல், வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுத்து பாத பூஜை செய்து சோடஷ சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், பெண்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காகவும், வாழப்பாடி ஆர்ய வைஸ்ய மகிளா சபா மற்றும் வனிதா கிளப் சார்பில் சோடஷ சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டதாக, வாசவி கிளப் நிர்வாகி சூர்யக்குமாரி தெரிவித்தார்.
புரட்டாசி கடைசி சனி: வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கோயில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோயிலில்,  ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் ரத்தினக் கற்கள் ஆபரண  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோடும் வீதிகளில் உற்சவமூர்த்தி புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா சென்றார். ஆஞ்சநேயருக்கு துளசி மாலையணி சாத்தி பக்தர்கள் தரிசித்தனர். முன்னதாக சுவாமி திருக்கல்யாண வைபவமும், ஊஞ்சல் சேவையும், திருக்கோடி கற்கோபுரத்தில் ஜோதி ஏற்றும் வழிபாடும் நடைபெற்றது. அருநூற்றுமலை பெலாப்பாடியில் பிரசித்தி பெற்ற  வரதராஜபெருமாள் மற்றும் கோதுமலை கேதாண்டராமர் மலைக் கோயில்களில்,  பக்தர்கள் காளை,கன்றுக்குட்டிகளை நேர்ந்து விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com