செந்தாரப்பட்டி, தம்மம்பட்டியில் சுருட்டுத் தொழில் பாதிப்பு

சேலம் மாவட்டம்  செந்தாரப்பட்டியில் கடந்த 150 வருடங்களுக்கு மேலாக சுருட்டு தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது.  

சேலம் மாவட்டம்  செந்தாரப்பட்டியில் கடந்த 150 வருடங்களுக்கு மேலாக சுருட்டு தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது.  தற்போது செந்தாரப்பட்டி, தம்மம்பட்டியில் மொத்தம்  120 பேர் சுருட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.   
 செந்தாரப்பட்டி, பவானி, ராமநாதபுரம், பைத்தூர் பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் சுருட்டு தயாரிக்கும் புகையிலைச்செடி  பயிரிடப்படுகிறது. தற்போது மழையில்லாததால்  ஈரோடு, பவானி  பகுதிகளில் இருந்து புகையிலையை வாங்கி வருகின்றனர்.  
காய்ந்த புகையிலைகள் கொள்முதல் செய்யப்படும்.  ஒரு கிலோவில் 5 கத்தை புகையிலை இருக்கும். முதல் தர புகையிலை  ஒரு கிலோ ரூ. 250-க்கும்,   இரண்டாம் தரம் கிலோ ரூ. 200-க்கும் விற்பனையாகும். அதற்கு பிறகான புகையிலைகள் சுருட்டுத்  தயாரிக்கப் பயன்படுத்தப்படும். 
இதுகுறித்து தம்மம்பட்டி பாஷா  கூறியதாவது:    ஒரு கிலோ புகையிலை கடந்த ஆண்டு  ரூ. 120-க்கு விற்றது. தற்போது ரூ. 250-க்கு  விற்கப்படுகிறது.  ஒரு கிலோ புகையிலையில் 750 முதல் ஆயிரம் சுருட்டு வரை  தயாரிக்கலாம். நாளொன்றுக்கு ஒருவர் 500 சுருட்டுக்கள் வரை  தயாரிக்கலாம்.
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டியிலிருந்து காரைக்குடி,புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  சுருட்டுக்கள் விற்பனைக்கு  கொண்டு செல்லப்படுகிறது.  25  சிறிய சுருட்டுக்களை ரூ.20 -க்கு விற்போம். கடைக்காரர்கள் அதனை ரூ.25 -க்கு விற்பார்கள்   என்றார். 
தம்மம்பட்டி  முகமது அலி(68 )  கூறியதாவது:  தற்போது சுருட்டு புகைப்பவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு  பகுதியாகக்  குறைந்துவிட்டது. வயதானவர்கள் மட்டும் சுருட்டு புகைக்கின்றனர். முன்பு போல சுருட்டு விற்பனையாவதும் இல்லை. மழையில்லாததால்  தற்போது புகையிலையைப் பயிரிடுவதும் இல்லை. மேலும்,  ஆயிரம்  சுருட்டுக்கு கூடுதலாக ரூ. 150 வழங்கக் கோரி  தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில்  கிடைக்கும் என்று நம்பிக்கை  உள்ளது .சுருட்டுத் தொழிலாளர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com