சேலம் கோட்டத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக ரூ.4.02 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டங்களில் பயணச்சீட்டு இல்லாமல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தது உள்ளிட்டவை மூலம் ரூ.4.02 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக பிரிவு குழுவினர் சார்பில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ரூ.82.03 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக 3,472 வழக்குகள் பதிவு செய்து ரூ.14,84,749 அபராதமும், உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 15,747 வழக்குகள் பதிவு செய்து ரூ.65,26,657 அபராதமும், பதிவு செய்யாமல் சரக்குகளை எடுத்து சென்றதாக 486 வழக்குகள் பதிவு செய்து ரூ.1,92,096 அபராதமும் வசூலிக்கப்பட்டது.
மேலும், சேலம் ரயில்வே கோட்டத்தில் 2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான பயணச்சீட்டு சோதனையில் ரூ.4.02 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 
பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 18,496 வழக்குகள் பதிவு செய்து ரூ.75.52 லட்சமும், உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 76,459 வழக்குகள் பதிவு செய்து ரூ.3.17 கோடியும், பயணிகள் பதிவு செய்யாமல் சரக்குகளை எடுத்துச் சென்றதாக 2,231 வழக்குகள் பதிவு செய்து ரூ.9.67 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. 
கடந்த 2017 காலகட்டத்தில் அபராத தொகை ரூ.3.41 கோடி வசூலிக்கப்பட்டது. நிகழாண்டு வசூல் கடந்த ஆண்டை விட 17.89 சதவீதம் அதிகமாகும்.
இதனிடையே, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை ஆகியோர் முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின், கோட்ட வணிக மேலாளர் கே.மது, உதவி வணிக மேலாளர் எம்.ஷாஜகான் ஆகியோரையும், பயணச்சீட்டு சோதனையில் ஈடுபட்ட அனைத்து ரயில்வே அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், பயணச்சீட்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர்கள் ஜே.கீவர், பி.செல்வகுமார், ஆர்.சத்யராஜ், பி.எஸ்.பத்மகுமார், ஜி.முத்துகுமார், ஏ.கார்த்திகேயன் ஆகியோருக்கு தலா ரூ.1,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்து, ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பை ஏற்படுவதை தவிர்த்திடும் வகையில், மேலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com