பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் "சேலம் தங்க மகள்': ஆட்சியர்

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்துத் துறை பெண்கள் முன்னேற்றத்

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்துத் துறை பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை ஒருங்கிணைத்து சேலம் தங்க மகள் திட்டம்  செயல்படுத்தப்படும் என்று  ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் "பெண் குழந்தைகளை காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்'  (பிங்கத்தான்-2018)  எனும் திட்டம் தொடர்பான கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற  விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியது:-
பெண் குழந்தை பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் கல்வி உள்பட அனைத்து விதமான முன்னேற்றத்துக்காக சேலம் தங்க மகள் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் கல்வி,  பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சமூக நலத்துறை, காவல் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் பெண்களின் முன்னேற்றத்துக்கென செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்தும் சேலம் தங்க மகள் திட்டம்  செயல்படுத்தப்படும். 
பாலின பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டாவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சேலம் தங்க மகள் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் சாதனை புரிந்த பெண்களை தேர்ந்தெடுத்து சேலம் தங்க மகள் என்ற பட்டம் வழங்கப்படும். 
பெண் குழந்தைகளை 18 வயது நிறைவடைதற்கு முன்பு திருமண வாழ்வில் தள்ளப்படுவது மிகப் பெரிய தவறாகும். அவர்களை குழந்தை தொழிலாளர்களாகவும், பாலியல் தொந்தரவுக்கு உள்படுத்துவதும் மிகப்பெரும் குற்றமாகும். இத்தகைய குற்றங்களிலிருந்து நம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தர பெற்றோர்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும். 
மகாத்மா காந்தி கூறியதுபோல், பெண்கள் அணு அளவு அடக்குமுறைக்கு ஆளானாலும் இந்தியா உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியாது. 
எனவே பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளை போல் அனைத்து வகையிலும் சமமாக வளர்த்து அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
மழையில் ஆட்சியர், மாணவிகள் நனைந்தபடியே 3 கி.மீ. பேரணி
முன்னதாக,  பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க கல்லூரி மாணவிகள் வாசித்தனர்.  பின்னர்,  சேலம் தங்க மகள் திட்டம் தொடர்பான லோகோ அறிமுகம் செய்யப்பட்டு வண்ண பலூன் பறக்கவிடப்பட்டது. 
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் சேலம்  அரசு மகளிர் கலைக்கல்லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, சாரதா கலை,  அறிவியல் கல்லூரி,  சோனா பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 2,000 மாணவியர்கள் கலந்து கொண்டனர். பேரணி காந்தி விளையாட்டு மைதானத்தில் துவங்கி முள்ளுவாடி கேட், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா வழியாக மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
மழையைப் பொருட்படுத்தாமல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சுமார் 3 கிலோ மீட்டர் வரை மாணவிகளுடன் நடந்து சென்று பேரணியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வந்தனா கார்க்,  மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) அ.தேவிகுமாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம்,  கோட்டாட்சியர்கள் ப.குமரேஷ்வரன்,  த.ராமதுரைமுருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ஆர்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com