வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல்  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சு.ஜெகதீஷ் தெரிவித்துள்ளது:  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர், எஸ்.எஸ்.எல்.சி,  பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பினைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2017 மார்ச் 31ஆம் தேதி வரை தொடர்ந்து புதுப்பித்து வருவோர், 2017 ஏப்ரல் முதல் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.  
 இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.50ஆயிரத்திற்குள்ளும், தமிழகத்திலேயே கல்வி பயின்றவர்களாகவும், வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெறக்கூடாது. பள்ளி மற்றும் கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக்கூடாது.
 தகுதியுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம்.
 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு பிரதி மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதி மாதம் ரூ.300, பிளஸ்2 முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு பிரதி மாதம் ரூ.600, மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை 10ஆம் வகுப்புக்கு ரூ.600, பிளஸ்2வுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
 இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com