தென்னையிலிருந்து நீரா பானம் இறக்க அனுமதி: தென்னை உற்பத்தியாளர் சங்கம் நன்றி அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் தென்னை உற்பத்தியாளர் சங்கம் சார்பில், தென்னையில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதியளித்த தமிழக அரசுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்து கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் தென்னை உற்பத்தியாளர் சங்கம் சார்பில், தென்னையில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதியளித்த தமிழக அரசுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்து கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்சிக்கு, திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஓய்வுபெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். சங்க இயக்குநர்கள் எம். லிங்கையன், ஏ.ஆர். சீனிவாசன், என். தேன்நிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த 19 ந் தேதி (புதன்கிழமை), சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், தென்னையிலிருந்து நீரா எனப்படும் பானம் இறக்கி, விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டு அனுமதியும் அளிக்கப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வத்தலகுண்டில் சனிக்கிழமை நடைபெற்ற திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில், அதன் தலைவர் முருகேசன் பேசியது:
தமிழக அரசு நீரா எனப்படும் பானம் இறக்க அனுமதி அளித்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு 10 மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, நீரா என்ற பானத்தை தென்னை விவசாய சங்கம் மற்றும் தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் மூலம் உரிமம் வழங்கப்படுவதாலும், அனைத்து தென்னை விவசாயிகளிடையே ஒற்றுமையும், நவீன தென்னை விவசாயத் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்காக, தமிழக அரசுக்கு திண்டுக்கல் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
கூட்டத்தில் முன்னதாக, எஸ்.கே. முகமதுஅலி வரவேற்றார். இதில், தென்னை உற்பத்தியாளர் சங்க இயக்குநர்கள் காசி, ரெங்கராஜன், ஜெயவீரபாண்டியன், பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com