தோட்டப் பயிர் விதைகள் வழங்கும் பணியில் மகளிர் காங்கிரஸார் ஈடுபடவேண்டும்: குமரி அனந்தன்

மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், தோட்டப் பயிர்களுக்கான விதைகளை வீடுகள் தோறும் வழங்கும் பணியினை மகிளா காங்கிரசார் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் மாநில காங்கிரஸ்

மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், தோட்டப் பயிர்களுக்கான விதைகளை வீடுகள் தோறும் வழங்கும் பணியினை மகிளா காங்கிரசார் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கூறினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா, திண்டுக்கல்லில் தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. தனியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஏஎஸ்பி. ஜான்சிராணி தலைமை வகித்தார். இதில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி ஷோபா ஓசா, பொதுச் செயலர் நக்மா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு. திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, ஆக்னஸ் சேவியர் (சமூக சேவை), கௌசல்யாதேவி (மருத்துவம்), சுமையா தாவூத் (கல்வி), அனுசுயா டெய்ஸி எர்னஸ்ட் (காவல் துறை), குணவதி (சமூக சேவகி), பூங்கோதை (விவசாயம்) ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில், ஷோபா ஓசா பேசியதாவது: தில்லியில் விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தியும், மத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது, சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதுபோன்ற அவல நிலை ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் என்றார்.
நக்மா பேசியது: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவர் ராஜீவ் காந்தி. இது, கடந்த 2009-14 இல் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின்போது மகளிருக்கான 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதற்கான ஒப்புதல் மாநிலங்களவையில் வழங்கப்பட்டபோதிலும், பாஜக அசுர பலம் பெற்ற மக்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களின் உரிமையை பாஜக அரசு பறிக்க முயல்கிறது என்றார்.
குஷ்பு பேசியது: இரட்டை இலையாக இருந்த அதிமுக, உள்கட்சிப் பூசல் காரணமாக தற்போது 3 இலைகளாக உருமாறி விட்டது. இதற்கு, மத்திய அரசு தான் காரணம். இரட்டை இலை என்ற சின்னம் கிடைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என கருதும் அதிமுகவினர், அதனைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எப்படி இருந்தாலும், 6 மாதங்களுக்கு மேல் அதிமுக அரசு நீடிக்காது என்றார்.
பின்னர், குமரி அனந்தன் பேசியதாவது: கட்சியில் உள்ள பல்வேறு அணிகள் ஒவ்வொரு பணியினை மேற்கொண்டு வரும் நிலையில், மகளிர் காங்கிரஸார் தோட்டப் பயிர்களுக்கான விதைகளை அருகில் உள்ள வீடுகளுக்கு வழங்க வேண்டும். அந்த விதை முளைத்து பயன்தரும்போது, விதையை வழங்கிய மகளிர் காங்கிரஸார் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் மக்கள் மனதில் இடம்பெறும். அந்த வகையில், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணியிடம் விதைகளை வழங்கி தொடக்கி வைக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில், செய்தி தொடர்பாளர் குஷ்பூ, முன்னாள் எம்.எல்.ஏ. செல்லக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com