ஆவின் தலைவர் - பொது மேலாளர் மோதல்: அலுவலகத்துக்கு பூட்டு

திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் 12 பணியிடங்கள் நிரப்பியதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிருப்தி அடைந்த தலைவர், பொதுமேலாளர் அறையை செவ்வாய்க்கிழமை பூட்டிச் சென்றார்.

திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் 12 பணியிடங்கள் நிரப்பியதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிருப்தி அடைந்த தலைவர், பொதுமேலாளர் அறையை செவ்வாய்க்கிழமை பூட்டிச் சென்றார்.
திண்டுக்கல் கிருஷ்ணாராவ் தெருவில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய சங்கம் (ஆவின்) செயல்பட்டு வருகிறது. அதிமுக நிர்வாகி திவான்பாட்ஷா ஆவின் தலைவராகவும்,  தங்கராஜ் என்பவர் பொது மேலாளராகவும் உள்ளனர். இந்நிலையில், பூட்டப்பட்டிருந்த பொது மேலாளர் அறைக்கு, மற்றொரு பூட்டை வைத்து திவான்பாட்ஷா செவ்வாய்க்கிழமை பூட்டி சென்றுள்ளார்.  வழக்கம்போல் புதன்கிழமை அலுவலகத்திற்கு சென்ற தங்கராஜ், தனது அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அலுவலகத்திலிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது, திவான்பாட்சா மற்றும் சில இயக்குநர்கள் சேர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை பூட்டிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே பொதுமேலாளருக்கு ஆதரவாக, அங்கு பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதன்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுதொடர்பாக ஊழியர்கள் சிலர் கூறியதாவது: ஆவின் நிறுவனத்தில், நிர்வாகப் பணி, கால்நடை மருத்துவர், மேலாளர் உள்ளிட்ட 12 பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் அனைத்தும், நாளிதழ்களில் விளம்பரம் செய்து, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே நிரப்பப்பட்டுள்ளன. இதில், திவான்பாட்ஷா சிபாரிசு செய்த நபர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பொதுமேலாளரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த திவான்பாட்ஷா, சில இயக்குநர்களின் துணையுடன் அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டுள்ளார் என தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக ஆவின் தலைவர் திவான்பாட்ஷாவிடம் கேட்டபோது, 12 பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் எவ்வித மோதலும் ஏற்படவில்லை. நிர்வாகக் குழு கூட்டத்தில் பொதுமேலாளர் தங்கராஜ் பங்கேற்பதில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் வாங்கித் தான் பணம் கொடுத்து வருகிறோம். நிர்வாகப் பணிகளுக்கு, பொதுமேலாளர் ஒத்துழைப்பதில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இயக்குநர்கள் அறையை பூட்டியுள்ளனர் என்றார்.
இதுகுறித்து பொதுமேலாளர் தரப்பில் கூறுகையில், பால் முகவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்பதும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதும் பொய்யான குற்றச்சாட்டு.  நியாயமான முறையில் பணியிடங்கள் நிரப்பியதே, தற்போதைய திடீர் மோதலுக்கு காரணம் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com