கம்பத்தில் செயல்படாத நீர் மின்சார உற்பத்தித் திட்டங்களால் வீணாகும் அரசு நிதி

கம்பம் பகுதியில் உள்ள நீர் மின்சார உற்பத்தித் திட்டங்களில் லோயர் கேம்ப்பில் ஒரு மின்னாக்கி, குள்ளப்ப கவுண்டன்பட்டி சிறுபுனல்

கம்பம் பகுதியில் உள்ள நீர் மின்சார உற்பத்தித் திட்டங்களில் லோயர் கேம்ப்பில் ஒரு மின்னாக்கி, குள்ளப்ப கவுண்டன்பட்டி சிறுபுனல் மின் நிலையம் ஆகியவை செயல்படாததால் அரசு நிதி வீணாவதுடன் தொடர் மின்சார பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
கேரள மாநிலம், தேக்கடி ஏரி-முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முன்னாள் முதல்வர் காமராஜர் முயற்சியில் லோயர் கேம்ப்பில் 1959 இல் ரூ. 7 கோடி மதிப்பில் புனல் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது. இங்கு 4 மின்னாக்கிகள் (ஜெனரேட்டர்கள்) மூலம் தலா 35 மெகாவாட் வீதம் மொத்தம் 140 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தலா 42 மெகாவாட் உற்பத்தி செய்யுமளவில் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 4  மின்னாக்கிகளில் 3 மட்டும்  தற்போது செயல்பட்டு வருகிறது. 
இதைத்தொடர்ந்து சுருளியாறு மின் உற்பத்தித் திட்டம், குறுவனூத்து பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது.
இதில் 2013 -இல் வெட்டுக்காட்டில் தொடங்கிய மின்சார உற்பத்தியின் போது ஆற்று தண்ணீரின் வேகத்தை தாக்குப் பிடிக்காமல் அணையின்  மதகு  ஓரத்தில் உள்ள சுவர் உடைந்து வெள்ளம் புகுந்து மதகை இழுத்து சென்றது. மின்சார உற்பத்தி நிலையங்களுக்குள்ளும் புகுந்து மின்நிலையத்தில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டு பல மாதங்களுக்கு பின்னர் சரி செய்யப்பட்டது.
இதேபோல்  குள்ளப்ப கவுண்டன் பட்டியில் பெரியாறு - வைகை நீர் மின்சாரத் திட்டம் - 4 தொடங்கப்பட்டது. இந்த மின்சார உற்பத்தி நிலையம் பல ஆண்டுகளாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. நிலையத்தை கட்டி சோதனை ஓட்டம் நடத்தியபோது ஆற்று தண்ணீருடன் மணலும் சேர்ந்து மின்சார நிலையத்திற்குள் புகுந்தது. இன்றுவரை மின்சார நிலையம் செயல்படாமல் பல கோடி ரூபாய் வீணாகி உள்ளது. கடுமையான மின்வெட்டு காலங்களில் கூட குறைந்த செலவு, தொழில்நுட்பத்தில் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்புகள் இருந்தும் மின்வாரிய அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காததால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதேபோல், லோயர்கேம்ப்பில் 4 ஆவதாக உள்ள மின்னாக்கியில் கடந்த 2 ஆண்டுகளாக பழுதாகி மின் உற்பத்தி செய்யப்படாமல் உள்ளது. 
 இதுகுறித்து ஓய்வு பெற்ற மின்சார வாரிய அலுவலர் ஒருவர் கூறியது: 
முல்லைப் பெரியாற்றில் பருவமழை காலங்களில் தண்ணீர் திறப்பு அதிகமாகும் போது, வேகமாக வரும் தண்ணீரை தடுப்பணைகள் மூலம் தடுக்க, அதற்கேற்ப சிறுபுனல் மின்சார நிலையங்களை அமைக்கவில்லை. குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் பல ஆண்டுகளாக செயல்படாத மின்சார உற்பத்தி நிலையம், லோயர்கேம்ப்பில் இயக்கப்படாத 4ஆவது மின்னாக்கிகள் என தாமதமாகும் பணிகளால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதை இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com