வத்தலகுண்டு அருகே சாலை அமைக்கும் பணியில் தாமதம்: பொதுமக்கள் அவதி

வத்தலகுண்டு அருகே 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணி முடிவுறாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

வத்தலகுண்டு அருகே 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணி முடிவுறாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
   திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியிலிருந்து  பெத்தானியாபுரம் வழியாக பட்டிவீரன்பட்டிக்கு செல்லும் குறுக்கு சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டி பிரதான சாலைக்கு பதிலாக இந்த வழியாக சென்றால், 2 கி.மீ. தூரம் குறைவு என்பதால், பொதுமக்களுக்கு இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது. வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை சீரமைப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2016 ஜூன் மாதம் ஒப்புந்தப்புள்ளி கோரப்பட்டது. மொத்தமுள்ள 3 கி.மீ. சாலையில், 1 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலம், வடிகால் மற்றும் சாலை வசதி ஏற்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த பணிகள் தற்போது வரை நிறைவு பெறவில்லை. 
   தற்போதைய நிலையில், 2 தரைப் பாலங்கள், கணவாய்ப்பட்டி முதல் பெத்தானியாபுரம் வரை சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வடிகால் அமைக்கும் பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த சாலையில் குவிக்கப்பட்ட சரளை மண் தற்போது வரை அதே நிலையில் தொடர்கிறது. சில நாள்களிலேயே முடிக்க வேண்டிய இந்த பணி, ஒப்பந்தக்தாரருக்கு ஆதரவாக செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வத்தலகுண்டு பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில்,  உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அறிவித்துவிட வேண்டும் என்ற நெருக்கடியில், அவசர கதியில் டெண்டர் விடப்பட்டது. அதே வேகத்தில் பணிகளும் தொடங்கியதால், விரைவில் சாலை அமைக்கும் பணி நிறைவு பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒன்றிய அலுவலர்களின் மெத்தனத்தால், ஒப்பந்தக்தாரர் பணியை முடிக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார்.  இதனால், பெத்தானியாபுரம் பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பணி முடிவுற்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுகிறது என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com