பணம் கொடுக்கிறார்கள்; கணக்கு கேட்பாரில்லை!

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வழங்கும் நிதி செலவிடப்படுவதை

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வழங்கும் நிதி செலவிடப்படுவதை முறையாக கண்காணிக்காததால்  அதன் நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது.
   மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளவும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் மற்றும் தேசிய பசுமைப் படை அமைப்புகள் தொடங்கப்பட்டன. 
  தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 11,200 சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு, மாநில அரசு சார்பில் பராமரிப்புத் தொகையாக ஆண்டுக்கு தலா ரூ. 2,500 வீதம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை கடந்த ஆண்டு முதல்  ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 
    மத்திய அரசின் நிதி உதவியுடன், தமிழகம் முழுவதுமுள்ள 8 ஆயிரம் தேசிய பசுமைப்படை அமைப்புகளுக்கு தலா ரூ. 2,500 வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, தனியார் தன்னார்வ அமைப்புகள் வழியாக அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு முதல் இந்த நிதி ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
    பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் தாவரவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற ஆசிரியர், சுற்றுச்சூழல் மன்றங்களை கண்காணிக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.  தேசிய பசுமைப் படைக் கண்காணிப்பு பணிகளுக்கு, மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் ஒருவர் மட்டுமே செயல்பட்டு வருகிறார். 
     இந்நிலையில், பள்ளி வளாகங்களில் மரக்கன்று வளர்ப்பு, சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மூலமாகவும் நிதி வழங்கப்படுகிறது.
   மரக்கன்றுகள் நடுவதற்கு, கல்வி மாவட்ட அளவில் ரூ. 1.50 லட்சம், கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துவற்கு ரூ. 1.50 லட்சம் வீதம் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி, மொத்தமுள்ள 69 கல்வி மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் தன்னார்வலர் அமைப்புகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
 மீதமுள்ள 32 கல்வி மாவட்டங்களில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    கடந்த ஆண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ. 15 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. நிகழாண்டில் மரக்கன்று நடும் பணிகளுக்காக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 தன்னார்வ அமைப்புகள் மூலமாகச் செயல்படுத்தப்படுவதால், இத்திட்டம் பெரும்பாலான மாவட்டங்களில் வெற்றி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அரசு தரப்பில் ஆய்வு செய்யப்படுவதில்லை. 
 இதனால், ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி பயனற்று போவதாகவும், அரசின் நோக்கம் நிறைவேறவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
   இது குறித்து ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் கே.பி. ரவீந்திரன் கூறியது: சுற்றுச்சூழல் துறை சார்பில் வழங்கப்படும் நிதி, தேசிய பசுமைப்படை அமைப்புகளுக்கு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மன்றங்களுக்கும் வழங்கப்படுகிறது. தன்னார்வ அமைப்புகளிடம் வழங்குவதால், அந்த அமைப்புகளுக்கு நெருக்கமான பள்ளிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முதல் போட்டிகள் வரை பெயரளவுக்கு மட்டுமே நடத்தப்படுகின்றன. 
    ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அரசு தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், பல இடங்களில் அரசு நிதியில் முறைகேடு நடைபெறுகிறது. சில கல்வி மாவட்டங்களில் மட்டும் ஆசிரியர், தலைமையாசிரியர் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
 அந்த நிலை, அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். அதில் தவறுகள் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால்,  தன்னார்வலர் அமைப்புகளை வரையறைப்படுத்துவது எளிதல்ல என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com