குடிநீர் விநியோகத்தில் பாரபட்சம்: திண்டுக்கல் ஆட்சியரிடம் 2 கிராம மக்கள் புகார்

குடிநீர் விநியோகத்தில் பாரபட்சம் நிலவுவதாக முருநெல்லிக்கோட்டை, குப்பமேட்டுப்பட்டி கிராம மக்கள் மாவட்டஆட்சியர் அலுவலக்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.  

குடிநீர் விநியோகத்தில் பாரபட்சம் நிலவுவதாக முருநெல்லிக்கோட்டை, குப்பமேட்டுப்பட்டி கிராம மக்கள் மாவட்டஆட்சியர் அலுவலக்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.  
முருநெல்லிக்கோட்டை:ரெட்டியார்சத்திரம் அடுத்துள்ள முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,  முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட பிற பகுதிகளுக்கு கடந்த சில நாள்களாக புதிய ஆழ்துளைக் கிணறு  அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஆனால், 150 வீடுகள் உள்ள எங்கள் பகுதிக்கு இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
குப்பமேட்டுப்பட்டி:  குஜிலியம்பாறை அடுத்துள்ள டி.கூடலூர் ஊராட்சிக்குள்பட்ட குப்பமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,  காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் பகுதியில் 80 வீடுகள் உள்ளன. இதில் 40 வீடுகள் வீதம் வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால்,  மேல்நிலைத் தொட்டி இயக்குபவரின் வீட்டிற்கு வழங்கியது போக மீதமுள்ள தண்ணீரை மட்டுமே பொதுமக்கள்  பிடிக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.  எனவே, மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
3 மாதங்களாக தண்ணீர் இல்லை:  வடமதுரை  அடுத்துள்ள மோர்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோப்பம்பட்டி கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீர்  விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதியினர் மனு அளித்தனர்.  இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறியதாவது.
எங்கள் பகுதியில் 350 வீடுகள் உள்ளன.  வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறு மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் பாதிப்படைந்துள்ளது.  இதனால் 3 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எங்கள் பகுதியில் தண்ணீர் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ள இடத்தில்  ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

"குளத்தைக் காணவில்லை'
வேடப்பட்டி குளத்தைக் காணவில்லை என  இந்து முன்னணி அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலர் எஸ்.சங்கர்கணேஷ் கூறியதாவது:  திண்டுக்கல்  அடுத்துள்ள அடியனூத்து ஊராட்சிக்குள்பட்ட வேடப்பட்டி பகுதியில் இருந்த குளத்தின் ஒரு பகுதி கடந்த சில  ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த  குளத்தில் குடியிருப்புகளும், வழிபாட்டு தலமும் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேடப்பட்டி பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கிய அந்த குளம்  முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நீர் நிலைகளை மீட்டு, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் மாவட்ட  நிர்வாகம், வேடப்பட்டி குளத்தையும் மீட்க வேண்டும். அதன் மூலம், அந்த பகுதியின் நிலத்தடி நீராதாரம் பாதுகாப்படும் என்றார்.  புகாரை பெற்றுக் கொண்ட ஆட்சியர் வினய், இதுதொடர்பாக திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் மற்றும் திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com