வத்தலகுண்டில் வருவாய்த்துறையினரால் "சீல்' வைக்கப்பட்ட வீடு திறப்பு

அரசு ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வருவாய்துறையினாரால் மூடி சீல் வைக்கப்பட்ட வீடு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

அரசு ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வருவாய்துறையினாரால் மூடி சீல் வைக்கப்பட்ட வீடு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
   திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெத்தானியபுரத்தை சேர்ந்தவர்  முத்தையா. அதிமுகவைச் சேர்ந்த இவர்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.  கடந்த முறை அறிவிக்கப்பட்ட   உள்ளாட்சி தேர்தலில் கணவாய்பட்டி ஊராட்சிக்கு தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.   இந்நிலையில்,  வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதாக இவர் மீது புகார் கூறப்பட்டது.  
இதையடுத்து கடந்த மே மாதம் 12- ஆம் தேதி முத்தையாவின் அலுவலகம்,  வீடுகளில் சோதனை செய்த வருவாய்துறையினர்  முத்தையாவின் அக்காள் செல்லம்மாள் வீட்டையும் முத்தையா  அலுவலகத்தையும் பூட்டி சீல் வைத்தனர். முத்தையாவின் வீடு என நினைத்து செல்லம்மாள் வீட்டை சீல் வைத்ததாக கூறப்படுகிறது.
வீடு பூட்டப்பட்டதால் செல்லம்மாள் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் சூரியகலா உள்ளிட்டோர் வேறு வீட்டில் குடியிருக்க நேரிட்டது.
 இந்நிலையில்   வீட்டை திறக்கக்கோரி  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சூரியகலா வழக்கு தொடர்ந்தார்.
 மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவியின்  படிப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக சீல் வைத்த வீட்டை திறக்க உத்தரவிட்டனர். அதனடிப்படையில்,சார்- ஆட்சியர் ஜான்சன் உத்தரவின் பேரில், வத்தலகுண்டு வருவாய் ஆய்வாளர் முத்துவிநாயகம், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஆ.பத்ரா,தலைமை காவலர் எம்.முருகன் உள்பட வருவாய்துறையினர் திங்கள்கிழமை சீல் வைத்த வீட்டை திறந்து சாவியை ஒப்படைத்தனர்.
இதுசம்பந்தமாக முத்தையா கூறும்போது, என்னுடைய அக்காள் செல்லம்மாள் புதியதாக கட்டியுள்ள வீட்டின் அருகே 300- க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.வழிபாட்டுத் தலங்களும் இருந்த பகுதியில் அரசு மதுபானக்கடை அமைய இருந்தது.
இதை அப்பகுதி மக்கள் தடுக்க வேண்டும் என தன்னிடம் கோரிக்கை விடுத்ததால் 50- க்கும் மேற்பட்டோர் திரண்டு அரசு மதுபானக்கடை அமைப்பதை தடுத்தோம். இதனால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய்ப் புகார் தெரிவிக்கப்பட்டு வருவாய்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இருப்பதாக கூறி சோதனை நடத்தப்பட்டது.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com