எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர தமிழக அரசு தீவிரம் காட்ட அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் லட்சுமி நரசிம்மன் கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் லட்சுமி நரசிம்மன் கூறினார்.
 திண்டுக்கல்லில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் 8 ஆவது மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் காரணமாகவே, சுகாதாரத்துறையில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. ஆனால் நிகழாண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால், 50 சதவீத இட ஒதுக்கீடு பறிபோய்விட்டது. இதன் காரணமாக, இனி வரும் ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்படும்.  மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், தமிழக அரசு மருத்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும், மத்திய அரசு வழங்குவதைப் போல் குழந்தை பராமரிப்பு விடுப்பாக 2 ஆண்டுகள் வழங்க வேண்டும்.  எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். ரூ.120 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இயலாது. ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே தரமான எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்க முடியும் என்றார்.
 முன்னதாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்துக்கு லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் பி.சுவாமிநாதன், அமைப்புச் செயலர் ராமலிங்கம், திண்டுக்கல் மாவட்ட செயலர் வி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com