ஆழ்துளைக் கிணறு அமைக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை :விவசாயிகள் புகார்

விவசாயத் தேவைக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அலுவலர்கள் முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

விவசாயத் தேவைக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அலுவலர்கள் முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், என்.பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியராஜ். அதேபகுதியில், இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளதாம். கடந்த 2002ஆம் ஆண்டு 950 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே மரியராஜ் நிலத்தின் அருகே உள்ள சேர்வராயன்குளம் பகுதியில் பஞ்சம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2012ஆம் ஆண்டு 300 அடியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை, பொதுகழிப்பிடத்தின் தேவைக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், 1 வாரத்திற்கு மேல் தண்ணீர் கிடைக்காத காரணத்தால், அந்த பொதுக்கழிப்பிடம் தற்போது வரை மூடப்பட்டுள்ளது. அதனால், ஆழ்துளைக் கிணறுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மரியராஜ் அமைத்திருந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், ஆழ்துளைக் கிணற்றில் உள்ள குழாய்களை தூய்மைப்படுத்துவதற்கு மரியராஜ் மற்றும் அவரை சுற்றியுள்ள விவசாயிகள் முயற்சித்துள்ளனர்.
ஆனால், ஆழ்துளை கிணற்றை புனரமைப்பு செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாம். இதனால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காமலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அனுமதி வழங்க ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆத்தூர் வட்டாரத் தலைவர் எஸ்.பாத்திமா ராஜரத்தினம் கூறியது:
விவசாயத் தேவைக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தக் கூடாது என கடந்த 2007ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனாலும், அரசாணைக்கு எதிராக உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய கிணறுகளை சுத்தம் செய்யவும், புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கும் தடையில்லா சூழலை உருவாக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com