கொடைக்கானலில் சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published on : 21st May 2017 12:29 AM | அ+அ அ- |
கொடைக்கானலில் நகராட்சிக்குள்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் உள்ள 24 வார்டுகளில் நகர்ப்பகுதி மற்றும் புறநகர்ப் பகுதி என 2பிரிவுகளில் நகராட்சிக்குள்பட்ட சாலைகள் உள்ளன. இதில் ஆனந்தகிரி, செண்பகனூர், தைக்கால், அப்சர்வேட்டரி, வட்டக்கானல், ரைபிள் ரேஞ்சாலை, நாயுடுபுரம் சாலை போன்ற இடங்களில் சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், அண்ணா சாலை, மூஞ்சிக்கல், உகார்த்தே நகர், அண்ணாநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நாள்களாக குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சரவணன் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நிதி கிடைத்தவுடன் அவை சீரமைக்கப்படும். மேலும் நகராட்சிக்கு சொந்தமான 2 குப்பை லாரிகள் பழுதடைந்துள்ளன.
இதனால் டிராக்டர் மூலமாக குப்பைகள் அள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் பழுதடைந்த லாரிகள் சரி செய்யப்பட்டு, அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகள் தேங்காமல் அகற்றப்படும் என்றார்.