சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு கள ஆய்வு நடத்துமா? மே 24, 25-இல் தேனி, திண்டுக்கல்லில் சுற்றுப்பயணம்

கொடைக்கானலிலும், திண்டுக்கல்லிலும் அதிகாரிகளுடன் கோப்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்வதை தவிர்த்து, பல கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்து சட்டப்பேரவை

கொடைக்கானலிலும், திண்டுக்கல்லிலும் அதிகாரிகளுடன் கோப்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்வதை தவிர்த்து, பல கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்து சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பி.எம். நரசிம்மன் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு(2016-2018) மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு ஆகிய துறைகளில் இந்த ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது, கடந்த 2016-17ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மே 23ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளும் இக் குழுவினர், மே 24 இல் கொடைக்கானலில் ஆய்வு செய்துவிட்டு, மே 25 மாலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு எந்த குழுவினர் வந்தாலும், ஆய்வு நடத்துவதற்காக கொடைக்கானல் மற்றும் பழனி பகுதியை மட்டுமே தேர்வு செய்கின்றனர். வறட்சிப் பகுதியான தொப்பம்பட்டி, குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னைக்காக பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஊராட்சிப் பகுதிகளில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், நிர்ணயிக்கப்பட்ட ஆழத்துக்கு அமைக்கப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.
மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்யவுள்ள கல்வித் துறை, சமூக நலம், சுகாதாரம், ஆதிதிராவிடர் நலம் உள்ளிட்ட துறைகள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா, மக்களுக்கு பயனளிக்கிறதா என்பதை களஆய்வு செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.
எந்தவொரு மாவட்டத்திலும் இல்லாத வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் நீராதாரங்களும், நீர்வழிப் பாதைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. அதேபோல், விவசாயத் தேவைக்கு வண்டல் மண் வழங்குவதன் மூலம், குளங்கள் தூர்வாரும் பணிகளிலும் திண்டுக்கல் மாவட்டம் முன்னோடியாக உள்ளது.
கள ஆய்வின்போது இதுபோன்ற பணிகளை பார்வையிட்டால், அடுத்த மாவட்டங்களில் எப்படி செயல்படுத்தலாம், நிதி ஆதாரங்களை சேமிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.
இதற்கு மாறாக, கொடைக்கானலிலும், திண்டுக்கல்லிலும் அதிகாரிகளுடன் கோப்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்வதால், மக்களுக்கும், அரசுக்கும் எவ்வித பயனுமில்லை. திண்டுக்கல் வரும் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் வறட்சியான இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com