கட்டுமானப் பொருள்களை எடுத்துச் சென்ற விவகாரம்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கொடைக்கானல் கீழ் மலை கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக கொண்டு வந்த மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை திருப்பி எடுத்துச் சென்றது குறித்து விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கொடைக்கானல் கீழ் மலை கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக கொண்டு வந்த மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை திருப்பி எடுத்துச் சென்றது குறித்து விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. 
கொடைக்கானல்  கீழ்  மலையில் உள்ள  கே.சி.பட்டி ஊராட்சிக்குள்பட்ட எழுத்துரைக்காடு ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள், சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு 1 கி.மீட்டர் நீள தார் சாலை  அமைத்துக் கொடுப்பதாகக் கூறி ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆய்வு  செய்தனர். ஆற்றுப் பாலம் கட்டுவதற்காக மணல், ஜல்லி உள்ளிட்ட பொருள்களை கொண்டு வந்து இறங்கினர்.
 பின்னர், அனைத்துப் பொருள்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த பொருள்கள் எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும். 
எங்கள் பகுதியில் சுமார் 30 வீடுகள்  உள்ளன. பட்டா கேட்டு விண்ணப்பித்தும், இதுவரை அதற்கான முயற்சி  மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல் 20 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்த  நிலையில் உள்ளன. எனவே, அந்த வீடுகளை அரசு  சார்பில் மராமத்து செய்து கொடுக்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
குடிநீர் கேட்டு மனு: திண்டுக்கல்  மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள சீவல்சரகு ஊராட்சிக்குள்பட்ட வேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள்  குடிநீர் வசதி ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். இதுதொடர்பாக  அப்பகுதியினர் கூறியதாவது:
எங்கள் பகுதியில் 165 குடும்பங்களைச் சேர்ந்த 750 பேர் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி  தரக் கோரி ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம்  பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். அப்போது  20 நாள்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் 4  நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், ஊர் பொதுமக்கள்  சார்பில்  ரூ. 5 ஆயிரம்   செலவு செய்து, நீரோட்டம் பார்த்து ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து கொடுத்தோம்.  ஆனால்,  வட்டார வளர்ச்சித்துறை  அலுவலர்கள் நிதியில்லை என தெரிவித்துவிட்டனர்.
எங்களது  குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். குடிநீர் வழங்கப்படாத நிலையில், அரசு சார்பில் எங்களுக்கு வழங்கியுள்ள குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை  திருப்பி ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.
ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை: திண்டுக்கல் அடுத்துள்ள கொத்தப்புள்ளி கிராமத்தைச் சேர்ந்த  பொதுமக்கள், அங்குள்ள  பொட்டியம்மன் குளத்திலிருந்து செல்லும் வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றக் கோரி மனு  அளித்தனர். 1 ஏக்கர் பரப்பிலான ஆக்கிரமிப்பினை அகற்றினால்  மட்டுமே, வடிகால் நீர் வெளியேறுவதற்கு வழி ஏற்படும். கொத்தப்புள்ளி பகுதியில் உள்ள  விவசாய நிலங்கள் தரிசாகாமல்  தடுக்கும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com