கொடைக்கானலில் பாதரசக் கழிவுகளை அகற்ற உடனடி நடவடிக்கை தேவை: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கொடைக்கானலில் பாதரசக் கழிவுகளை அகற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொடைக்கானலில் பாதரசக் கழிவுகளை அகற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 கொடைக்கானல் ஏரி மீன்களிலும், கொடைக்கானல் தர்மாமீட்டர் தொழிற்சாலை வழியே பயணிக்கும் பாம்பாறு ஆற்றின் நீரைப் பெறும் பெரியகுளம் பகுதி கண்மாய் மீன்களிலும் அதிக அளவு பாதரசம் இருப்பதாக ஹைதரபாத் ஐஐடி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
இதுதொடர்பாக திண்டுக்கல் ஆட்சியருக்கும், கொடைக்கானல் நகராட்சி ஆணையருக்கும் ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் ஆசிப் குரேஷி கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. 
 இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன், மக்கள் சிவில் உரிமைக் கழக (பியுசிஎல்) தலைவர் பேராசிரியர் முரளி, பேராசிரியர் தினகரன் ஆகியோர் மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
 பாதரச கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஹைதாரபாத் ஐஐடி பேராசிரியர் நடத்திய ஆய்வில், கொடைக்கானல் ஏரி, பாம்பாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாதரசக் கழிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
இதனால் கொடைக்கானல் ஏரி மற்றும் பாம்பாறு நீரைப் பெறும் பெரியகுளம் கண்மாய்களில் வளரும் மீன்களில் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் மக்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, சிறுநீரக பாதிப்பு ஏற்படும். 
இதுதொடர்பாக பொதுமக்களை எச்சரிக்குமாறு பேராசிரியர் ஆசிப் குரேஷி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். இருப்பினும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வில்லை.
 ஒரு கிலோ எடையுள்ள மீனில் அதிகபட்சமாக 30 மைக்ரோ கிராம் பாதரசம் தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை கூறியுள்ளது. ஆனால், கொடைக்கானல் ஏரியில் இருந்த 8 மீன்களை சோதித்த போது அதில் நான்கு மீன்களில் 41.9 மைக்ரோ கிராம் வரையிலும், பெரியகுளம் கண்மாயில் பிடித்த மீனை சோதித்தபோது அதில் 94 முதல் 165 மைக்ரோ கிராம் வரையிலும் பாதரசம் இருந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 மடங்கு கூடுதலானது.
 கொடைக்கானல் மண்ணில் உள்ள பாதரசத்தை சுத்திகரிப்பதற்கான தர அளவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பார்க்கையில் அந்த நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரிட்டனில் பின்பற்றப்படும் தர அளவை விட 20 மடங்கு பாதரசத்தை கொடைக்கானலில் விட்டுச் செல்லும். இதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் அளித்தது முறையல்ல.
 எனவே தர்மாமீட்டர் தொழிற்சாலை வளாகத்தை சுத்திகரிக்க கடும் விதிகளை விதிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நிர்ப்பந்திக்க வேண்டும். பாதரச கழிவுகள் கலந்த மீன்களை உண்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com