பழனி அருகே இருதரப்பு மோதலில் 3 பேர் காயம்: 8 பேர் மீது வழக்குப் பதிவு

பழனியை அடுத்த பொன்னாபுரத்தில் சாக்கடை கழிவு நீர் செல்வது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த பொன்னாபுரத்தில் சாக்கடை கழிவு நீர் செல்வது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்டது பொன்னாபுரம்.  இங்கு கடந்த சில மாதங்களாக கழிவுநீர் செல்வது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பிரிவினர் சாக்கடைநீர் செல்லும் வழியை அடைத்து விட்டதால் மற்றொரு பிரிவினருக்கும், இவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் ஒரு தரப்பில் பிரசன்னா, குமார் ஆகியோரும், மற்றொரு தரப்பில் சங்கர் என்பவரும் காயமடைந்தனர். 
இதுதொடர்பாக ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருதரப்பிலும் தலா நான்கு பேர் என எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து வேண்டுமென்றே போலீஸார் இருதரப்பிலும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்து ஒருதரப்பினர் பொன்னாபுரம் - ஆயக்குடி சாலையில் சாலை மறியலுக்கு முற்பட்டனர். 
இதையடுத்து சம்பவ இடத்துக்கு பழனி டிஎஸ்பி. சுந்தர்ராஜ், தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தி கிராம வரைபடத்தில் உள்ள படி சாக்கடை அமைப்பதே முறையாகும் என தெரிவித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். 
இதுகுறித்து விடுதலை சிறுத்தை அமைப்பினர், கோட்டாட்சியர் அருண்ராஜ் வசம் தங்கள் தரப்பு நியாயங்களை விளக்கி மனு கொடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com