தண்ணீர் கட்டணம் வசூலிக்க மறந்த மாநகராட்சி நிர்வாகம்: பல லட்சம் ரூபாய் இழப்பு
By DIN | Published on : 15th November 2017 08:38 AM | அ+அ அ- |
கடந்த 8 ஆண்டுகளாக ஆர்.எம்.காலனியில் உள்ள 288 வீடுகளுக்கு தண்ணீர் கட்டணம் வசூலிப்பதை நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மறந்ததால், பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் கடந்த 1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. மொத்தம் 288 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், நிர்வாக பொறுப்பினை வீட்டு வசதி வாரியமே மேற்கொண்டு வந்தது. அதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது முதல், இந்தப் பகுதிக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீர் ஓடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இந்த வீடுகளுக்கு, குடிநீரற்ற பிற பயன்பாடுகளுக்கான தண்ணீர் அதே பகுதியில் அமைந்துள்ள கிணறுகளிலிருந்து குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வீட்டு வசதி வாரிய நிர்வாக்ததின் கீழ் இருந்தவரை, தண்ணீர் விநியோகத்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டபோதிலும், 288 வீடுகளுக்கு குடிநீர் இல்லாத பிற தேவைக்கான தண்ணீர் விநியோகிக்கும் செலவு மாநகராட்சி சார்பிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
மோட்டார் இயக்குவதற்கான மின்சாரக் கட்டணம் மட்டுமின்றி, தண்ணீர் குழாய் பழுது மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட இதர செலவுகளையும் மாநகராட்சி நிர்வாகமே செய்து வந்துள்ளது. இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடந்த 8 ஆண்டுகளாக சுமார் ரூ.14 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு ரூ. 80 கோடி செலவில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்துக்காக ஆர்.எம்.காலனி பகுதிக்குச் சென்ற மாநகராட்சி அலுவலர்கள், 288 வீடுகளுக்கு தண்ணீர் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மாநகராட்சிப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மட்டுமின்றி, ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுவதற்கு, இதுபோன்ற நிர்வாகக் குறைபாடுகளே முக்கிய காரணம் என ஊழியர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: பழைய நடைமுறைகளை பின்பற்றியே, புதிதாக வரும் அலுவலர்களும் செயல்படும் நிலை உள்ளது. இதனால், தண்ணீர் விநியோகத்துக்கான செலவுகள் குறித்து இதுவரை தெரியவில்லை. தற்போது கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால், பல வீடுகள் காலியாக உள்ளன. மேலும், மின் மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. 2018 மே மாதத்துக்குள் அனைத்து வீடுகளையும் காலி செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக தண்ணீர் கட்டணம் வசூலிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.