கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கை: ரூ.8.45 லட்சம்  அபராதம்

டெங்கு  காய்ச்சலை  கட்டுப்படுத்தும் வகையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, கொசுப் புழு  உற்பத்தியாவதற்கு காரணமாக  இருந்த  வணிக

டெங்கு  காய்ச்சலை  கட்டுப்படுத்தும் வகையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, கொசுப் புழு  உற்பத்தியாவதற்கு காரணமாக  இருந்த  வணிக வளாகம் மற்றும் வீடுகளுக்கு இதுவரை ரூ.8.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு தொடர்பாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரம்,  கல்வித் துறை உள்ளிட்ட துறைகளின் முதன்மை அலுவலர்களுடனான  கலந்தாய்வுக்  கூட்டம்  திங்கள்கிழமை  நடைபெற்றது.  கூட்டத்துக்கு  தலைமை  வகித்து ஆட்சியர்  டி.ஜி. வினய்  பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர், தொப்பம்பட்டி, சாணார்பட்டி, வேடசந்தூர், நத்தம், வத்தலகுண்டு, அம்மையநாயக்கனூர், சின்னாளபட்டி, பழனி, ஒட்டன்சத்திரம்  ஆகிய பகுதிகளில் காய்ச்சலின் தாக்கம் உள்ளது.  காய்ச்சலினால் பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கையில் தற்போது மகளிர் சுயஉதவிக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசுப் புழுக்கள் உள்ள வீடுகளுக்கு  அபராதம் விதிக்கப்படும் என்பதையும் ஆய்வுக்குச்  செல்லும் அலுவலர்கள் பொதுமக்களிடம்  தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் இதுவரை ரூ. 8.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது  என்றார்.
முன்னதாக, ஊரகப்  பகுதியில் கொசுப் புழுக்கள் அழிக்கும் பணிகள் தொடர்பான பதிவுகளை அலுவலர்கள் மேற்கொள்வதற்கு  உதவும்  வகையில், வீடுகளில் ஒட்டுவதற்கான படிவம் உள்ள ஸ்டிக்கரை (ஒட்டு வில்லை) ஆட்சியர் வினய் வெளியிட்டார்.
கூட்டத்தில், ஊரக  வளர்ச்சி  மேம்பாட்டு முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, நலப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன்,  பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com