முகாமுக்கு மருத்துவர்கள் வர தாமதம்: மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

பழனியில் அரசு சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட பயனாளிகள் தேர்வு மற்றும் மருத்துவ முகாமக்கு நீண்ட நேரமாக மருத்துவர்கள்

பழனியில் அரசு சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட பயனாளிகள் தேர்வு மற்றும் மருத்துவ முகாமக்கு நீண்ட நேரமாக மருத்துவர்கள் வராததால், பொறுமையிழந்த மாற்றுத் திறனாளிகள் பழனி- திண்டுக்கல் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை வரை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், காலை முதலே நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் முகாமில் கலந்துகொள்ள வந்து காத்திருந்தனர். ஆனால்,  மதியமாகியும் மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வரவில்லை. இதற்காக பல மணி நேரமாகக் காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் ஆத்திரமடைந்தனர்.  அதையடுத்து, முகாமுக்கு வந்திருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் மாற்றுத் திறனாளிகளை அலட்சியமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பழனி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக பழனி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை ஆய்வாளர் வைரம், வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டோரை சமாதானம் செய்தனர். மேலும், உடனடியாக மருத்துவர்களை முகாமுக்கு அழைத்து வந்ததைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com