திண்டுக்கல், கொடைக்கானல், போடியில் பலத்த மழை

திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் போடி பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் போடி பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசினாலும்,  காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை திண்டுக்கல், சாணார்பட்டி, சின்னாளப்பட்டி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் திண்டுக்கல் பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  இந்த மழை, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்,  தீபாவளி பண்டிகையையொட்டி நடைபாதை வியாபாரத்தை நம்பியுள்ள வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் புதன்கிழமை காலை முதல் மேகமூட்டமும், அதனைத் தொடர்ந்து மிதமான வெயிலும் நிலவியது. மாலையில் மீண்டும் அதிகமான மேகமூட்டம் நிலவியதால் மலைச்சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன.
 இதனிடையே அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், செண்பகனூர், பாம்பார்புரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் அண்ணா சாலை,  செவண் ரோடு, மூஞ்சிக்கல் பகுதிகளில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் தண்ணீர் சற்று கூடுதலாக வரத் தொடங்கியுள்ளதுடன் குளிரும் அதிகரித்துள்ளது.
போடி: போடியில் கடந்த 2 வாரங்களாக மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இது இரவு வரை நீடித்தது. இதனால் சாலைகள், சாக்கடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்நிலையில் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் பரவலான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com