'வன்முறை இல்லாத போராட்டங்கள் மூலம் குழந்தைகள் பிரச்னைக்கு தீர்வு'

குழந்தைகள் மீதான பிரச்னைகளுக்கு எதிராக வன்முறையில்லாத போராட்டங்கள் மூலம் தீர்வு காண வேண்டும் என நெடும் பயண (பாரத் யாத்திரா) பிரசாரத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் புவன்

குழந்தைகள் மீதான பிரச்னைகளுக்கு எதிராக வன்முறையில்லாத போராட்டங்கள் மூலம் தீர்வு காண வேண்டும் என நெடும் பயண (பாரத் யாத்திரா) பிரசாரத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் புவன் சத்தியார்த்தி தெரிவித்தார்.
குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி இந்திய நெடும் பயண (பாரத் யாத்ரா) பிரசாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன் இப்பிரசார பயணம் தொடங்கிய இக்குழுவினர் திண்டுக்கல்லுக்கு வியாழக்கிழமை வந்தனர். அந்த குழுவினருக்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பால்பாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், கைலாஷ் சத்தியார்த்தியின் மகனும், நெடும் பயணத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான புவன் சத்தியார்த்தி பேசியதாவது: எதிரிகளிடமிருந்து தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல், நாட்டுக்குள் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் கடத்தல் போன்ற பிரச்னைகளுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது. வன்முறையில்லாத போராட்டங்கள் மூலம் அதற்கான தீர்வினை நாம் உருவாக்க வேண்டும்.
அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் 6 இடங்களிலிருந்து தொடங்கப்பட்டுள்ள இப்பேரணி 22 மாநிலங்கள் வழியாக தலைநகர் தில்லியில் இணைகிறது. 35 நாள்கள் நடைபெற உள்ள இப்பேரணி இதுவரை 11 ஆயிரம் கி.மீட்டர் தூரத்திற்கு பயணித்துள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலனை பாதுகாப்பது குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெடும் பயணத்தின் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மது.செந்தில்குமரன், மெர்சி அறக்கட்டளைத் தலைவர் மெர்சி அன்பரசி, வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com