புத்தூர் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை கட்ட 3 ஆண்டுகள்!: பொதுமக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அடுத்துள்ள புத்தூர் ஊராட்சியில் 3 ஆண்டுகளுக்கு முன் 380 தனிநபர்களுக்கு தொடங்கப்பட்ட கழிப்பறை கட்டுமானப் பணி தற்போது வரை முடிவுறாததால், திறந்தவெளிக் கழிப்பிடத்தை ஒழிக்க ம

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அடுத்துள்ள புத்தூர் ஊராட்சியில் 3 ஆண்டுகளுக்கு முன் 380 தனிநபர்களுக்கு தொடங்கப்பட்ட கழிப்பறை கட்டுமானப் பணி தற்போது வரை முடிவுறாததால், திறந்தவெளிக் கழிப்பிடத்தை ஒழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புத்தூர் ஊராட்சியில் பிச்சம்பட்டி, பூசாரிப்பட்டி, காக்காயனூர், கோட்டைக்கல், குருந்தப்பட்டி, குப்பேரிப்பட்டி, அரண்மனைப்பட்டி, கருவாடன்செட்டியப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் சுமார் 1400 வீடுகள் உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மலைக் கிராமங்களான இந்தப் பகுதியில், பெரும்பான்மையாக கூலி தொழிலாளர்களே வசித்து வருகின்றனர்.
இதனால், பொதுமக்கள் தரப்பில் கழிப்பறை கட்டுவதற்கு ஆர்வமில்லை. இந்நிலையில், தனிநபர் கழிப்பறை கட்டியவர்களுக்கு மட்டுமே தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், தாங்களாகவே முன்வந்து கழிப்பறை கட்டுவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சுமார் 380 வீடுகளுக்கு கழிப்பறை கட்டும் பணிகள் புத்தூர் ஊராட்சி செயலர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், குழி தோண்டாமல் பூமியின் மேற்பரப்பிலேயே சிமென்ட், செங்கல்லை வைத்து கழிப்பறைக்கான சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வேறெந்த வேலையும் நடைபெறவில்லை. இதனிடையே, முடிவுறாமல் இருக்கும் கழிப்பறை சுவர்களுக்கு அருகில் சம்பந்தப்பட்ட பயனாளிகளை நிறுத்தி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதனால், அதிருப்தி அடைந்த பயனாளிகள், ஊராட்சி செயலரிடம் முறையிட்டும், பணிகளை முடிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, 8 மாதங்களுக்கு முன் புதிய பயனாளிகள் 100-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்து, கழிப்பறை கட்டும் பணி நடைபெற்றுள்ளது. அதில், 2 அடிக்கு மட்டும் சுவர் எழுப்பிய நிலையில், மேற்கொண்டு எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. இதனால், புத்தூர் கிராம மக்கள் வழக்கம்போல் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் தொடர்கிறது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் கூறியது: அரசு சார்பில் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 மானியம் வழங்கப்படும் எனக் கூறி கட்டுமானப் பணிகளை தொடங்கினர். கட்டுமானப் பணிகளுக்கும் 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளே பயன்படுத்தப்பட்டனர். ஆனாலும், பணிகளை முடிக்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். மலை சூழ்ந்த இந்தப் பகுதிக்கு உயர் அதிகாரிகள் யாரும் வராததால், தனிநபர் கழிப்பறைத் திட்டம் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தால், 100 நாள் வேலை அட்டையை பறித்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்றார்.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஒருவர் கூறியது: ஊராட்சி செயலர் மற்றும் அப்பகுதி மக்களிடையே ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், தனிநபர் கழிப்பறைத் திட்டம் புத்தூர் ஊராட்சியில் முடக்கப்பட்டுள்ளது. அதனால், புதிய பணி மேற்பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, மே மாதம் இறுதிக்குள் நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை முடித்து, தனிநபர் கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com