கந்து வட்டி, வீடு அபகரிப்பு புகார்: ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி

கந்து வட்டி மற்றும் வீடு அபகரிப்பு தொடர்பாக தனித் தனியே புகார் அளிக்க வந்தவர்கள் 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கந்து வட்டி மற்றும் வீடு அபகரிப்பு தொடர்பாக தனித் தனியே புகார் அளிக்க வந்தவர்கள் 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நீலமலைக்கோட்டையை அடுத்துள்ள பிரம்மநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பா.ஜெயந்தி. இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்த போது, திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை அடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், மண்ணெண்ணெய் கேனை பறித்து மீட்டனர். விசாரணையில் ஜெயந்தி கூறியதாவது: நீலமலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடம் ரூ.50ஆயிரம் கடனாக பெற்றேன். அதற்கு எனக்கு சொந்தமான மனை பத்திரத்தையும், வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட்டும் அவரிடம் வழங்கி இருந்தேன். அதேபோல், எனது தங்கை கவிதாவும் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக 6 சதவீத வட்டி கொடுத்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக என்னால் வட்டி கொடுக்க முடியவில்லை. 
 இதனால், எனது தங்கை கவிதா வீட்டிற்கு சென்று ஈஸ்வரன் தகராறு செய்தார். இந்நிலையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில், நான் ரூ.3.5 லட்சம் வாங்கியதாகவும், எனது தங்கை கவிதா ரூ.2.5 லட்சம் வாங்கியதாகவும் ஈஸ்வரனின் மாமனார் ராஜேந்திரன் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதையடுத்து நான், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்பேரில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு என்னையும், ஈஸ்வரனையும் அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நீதிமன்ற வழக்கை ஈஸ்வரன் தரப்பினர் திரும்பப் பெறுவதாகவும், அதேபோல், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை நான் (ஜெயந்தி) திரும்ப பெற வேண்டும் என்றும் சமரசம் பேசப்பட்டது. மேலும், மாதந்தோறும் ரூ.3ஆயிரம் வீதம் செலுத்தி மொத்தம் ரூ.50ஆயிரத்தை கொடுத்த பின் எனது பத்திரத்தை திரும்ப கொடுத்துவிட வேண்டும் என கூறிவிட்டு வந்துவிட்டேன். 
  அதன் பின்னர்,  2 வழக்குரைஞர்களுடன் ஈஸ்வரனின் மனைவி  மட்டுமே காவல் நிலையத்துக்கு வருகிறார். இந்நிலையில் மீண்டும் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இதனால், உயிரிழப்பதை தவிர வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்: இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள மூனாண்டிப்பட்டியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (35), தன் குழந்தைகள் மஞ்சுளா தேவி மற்றும் மதன் ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். 
அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து, பாதுகாத்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது செல்வி கூறியதாவது: நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்கும் நோக்கில்,  எனது தந்தை சுப்பன் என்னையும், குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். எனவே சுப்பன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எனது வீட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்.
  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com