திண்டுக்கல்லுக்கான காவிரி நீர் 40 லட்சம் லிட்டர் குறைப்பு: ஊரகப்பகுதி குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்றுத் திட்டம்

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் திண்டுக்கல் நகருக்கு வழங்கி வரும் 40 லட்சம் லிட்டர் நீரின் அளவைக் குறைத்து, ஊரகப் பகுதிகளின்

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் திண்டுக்கல் நகருக்கு வழங்கி வரும் 40 லட்சம் லிட்டர் நீரின் அளவைக் குறைத்து, ஊரகப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி  செய்வதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆழ்துளை கிணறுகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு  மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள்,  306 கிராம ஊராட்சிகள் உள்ளன.  இந்த மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 35 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்  செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 2006 ஆம் ஆண்டு கரூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் காவிரி கூட்டுக்  குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் மூலம்  816 ஊரக குடியிருப்புகள், 7 பேரூராட்சிகள் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி  பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளிலிருந்து  நாளொன்றுக்கு 3.20 கோடி லிட்டர்  தண்ணீர் எடுக்க வேண்டும். ஆனால் தற்போதைய  நிலையில் 2.30 கோடி  முதல் 2.50 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனிடையே ரூ.636 கோடி செலவில் கரூர்  அடுத்துள்ள மாயனூர் காவிரி ஆற்றில் தொடங்கப்பட்டுள்ள புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நத்தம், சாணார்பட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய வட்டாரங்களில் உள்ள 1, 018 ஊரகப் பகுதிகளுக்கும்,  3 பேரூராட்சிகளுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  
 நாளொன்றுக்கு 3.90 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் நோக்கில்  நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், தற்போதைய நிலையில் 2 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கான  முயற்சியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  இதன் மூலம், கோடை காலத்தில் ஏற்படும்  குடிநீர் பிரச்னையை எளிதாக சமாளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆழ்துளை  கிணறு அமைப்பதை  தடுத்து நிறுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  
குடிநீர் தேவைக்காக  மாவட்டம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள்  தண்ணீர் இல்லாமல் பயன்பாடற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக, நிகழாண்டில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை  தவிர்க்க வேண்டும் என வட்டார  வளர்ச்சி அலுவலர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,  கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அனைத்து முயற்சிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆத்தூர் நீர்த்தேகத்தில் 12 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.  அதேபோல் காவிரி புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திலும் தண்ணீர் கிடைக்க தொடங்கியுள்ளது. 
திண்டுக்கல் நகருக்கு வழங்கப்படும் 1.20 கோடி லிட்டர் காவிரி நீரை, 80 லட்சம் லிட்டராக  குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்  மூலம் சேமிப்பாகும் 40 லட்சம் லிட்டர் தண்ணீரை, குடிநீர் தட்டுபாடு நிலவும் கிராமங்களுக்கு வழங்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
காமராஜர் நீர்த்தேக்கம் மூலம் கிடைக்கும் கூடுதல் நீரை திண்டுக்கல் நகரின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை தவிர்க்கும் வகையில்,  குழாய்கள் மூலம் காவிரி  கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்பு ஏற்படுத்தி தண்ணீர் விநியோகம் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com