பழனி மலைக் கோயில் ஐம்பொன் சிலை மோசடி: சிபிஐ விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

பழனி மலைக் கோயிலில் உள்ள ஐம்பொன் சிலை மோசடி தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழனி மலைக் கோயிலில் உள்ள ஐம்பொன் சிலை மோசடி தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். மாவட்டச் செயலர் ஆர்.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். 
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆர்.சச்சிதானந்தம் கூறியதாவது: பழனி மலைக் கோயில் கருவறையில் போகர் உருவாக்கிய நவபாஷன சிலை உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு பழனி தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்புதலோடு அந்தசிலைக்கு மாற்றாக ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள  முருகன் சிலையை உருவாக்கியது. 
இந்த ஐம்பொன் சிலையில் கலப்பதற்காக வழங்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து வேறு உலோகங்களை வைத்து சிலை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது. மேலும் பழனி முருகன் கோயிலில் 2012ஆம் ஆண்டு நடக்க வேண்டிய கும்பாபிஷேகத்தை 2006 ஆம் ஆண்டே அவசர கோலத்தில் நடத்தி முடித்தனர். இதற்காக கோயில் கருவறை 24 நாள்கள் அடைக்கப்பட்டிருந்தது. நவபாசான சிலையை கடத்துவதற்காக நடத்தப்பட்ட முயற்சியாக இது கருதப்படுகிறது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென, இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிலை செய்வதில் நடந்துள்ள மோசடி, நவபாசான சிலையை கடத்த முயற்சி, இதன் மீது விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே வேறு பிரிவுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே 2004 ஆம் ஆண்டு அறநிலையத்துறை பழனி கோயில் நிர்வாக பொறுப்பில் இருந்தவர்கள், அறங்காவல் குழுவைச் சேர்ந்தவர்கள், ஐம்பொன் சிலை செய்த ஸ்தபதி, அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் செயலர் ஆணையர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்க வேண்டும்.
இப்பிரச்னையில் முழு உண்மைகளும் வெளி வரும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.பாண்டி, கே.பாலபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com