பொங்கல் பண்டிகை: காய்கள் விலை வீழ்ச்சி

பொங்கல் பண்டிகைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் பூசணி, அவரை மற்றும் மொச்சை ஆகியவற்றின் விலை வீழ்ச்சியடைந்ததால், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் பூசணி, அவரை மற்றும் மொச்சை ஆகியவற்றின் விலை வீழ்ச்சியடைந்ததால், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இம்மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேரில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு போதிய மழையில்லாததால், இவற்றின் சாகுபடி பரப்பு குறைந்தது. எனவே, பொங்கல் பண்டிகையின் போது, காய்களின் வரத்து குறைவால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. ஆனால், நிகழாண்டில், கடந்த 3 மாதங்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டன. கடந்த 20 நாள்களுக்கு முன், அனைத்து வகையான காய்கறிகளின் வரத்தும் அதிகரித்ததைத் தொடர்ந்து, விலை சரிவு ஏற்பட்டது. வெங்காயம், பல்லாரி கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், கிழங்கு வகைகள் ரூ.30-க்கும் கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 2 மாதங்களுக்கு முன் அதிகபட்சமாக ரூ.70-க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது ரூ.7-க்கு விற்கப்படுகிறது. பிற காய்கறிகள் அனைத்தும் ரூ.20-க்கு கீழாக உள்ளன. 
பொங்கல் காய்கள் விலை வீழ்ச்சி: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, பொங்கல் பண்டிகையின் போது பூசணி, அவரை, மொச்சை உள்ளிட்ட காய்கறிகளின் தேவை அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு அதிக பரப்பில் விவசாயிகள் இவற்றை சாகுபடி செய்கின்றனர். வழக்கமாக இந்த வகை காய்களின் விலை, பொங்கல் பண்டிகையின் போது உச்சத்தில் இருக்கும். ஆனால், நிகழாண்டில், வரத்து அதிகரிப்பால் ஆதார விலையை கூட பெற முடியாமல் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 4 நாள்களுக்கு முன் ரூ.60-க்கு விற்கப்பட்ட மொச்சை, திண்டுக்கல் காந்தி சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.25-க்கு விற்கப்பட்டது. அதேபோல் பூசணி கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரையிலும், அவரை ரூ.10 முதல் ரூ.13 வரையிலும் விற்பனையானது. இதுகுறித்து வடமதுரையை அடுத்துள்ள கோப்பம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெ.ரெங்கசாமி கூறியது: பொங்கல் பண்டிகைக்கு விற்க வேண்டும் என்பதற்காகவே மொச்சை, பூசணி, விரலி மஞ்சள் ஆகிய பயிர்களை ஆண்டுதோறும் சாகுபடி செய்கிறேன். 
கடந்த ஆடி, ஆவணி மாதங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, விலைக்கு லாரி தண்ணீர் வாங்கி மஞ்சள் செடிகளை பாதுகாத்தேன். ஆனால், மஞ்சள் குலைகளுக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. விலை வீழ்ச்சியால் மொச்சையும் கை கொடுக்க வில்லை. சாகுபடிக்காக செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை. பொங்கல் பூ (கன்னிப் புல்) கட்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தக்காளி, பூசணி, அவரை, புடலை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கள் கிலோ ரூ.10-க்கும் குறைவாக விற்பனை செய்தால், சாகுபடி செய்த விவசாயிக்கு எதுவும் மிஞ்சாது.
பாரம்பரியமாக செய்து வரும் விவசாயத்தை கௌரவத்துக்காக விட்டுக் கொடுக்காமல் தொடர வேண்டிய நிலை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com