கொலை வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை: திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
By DIN | Published on : 14th January 2018 12:42 AM | அ+அ அ- |
மதுரையைச் சேர்ந்தவரை, திண்டுக்கல்லில் வெட்டிக் கொலை செய்த இருவருக்கு, தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்துள்ள பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வி. நவரத்தினம் (41). இவர், கடந்த 2009ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள ரெங்கநாதபுரம் மலை கரட்டில் கிடந்த நவரத்தினத்தின் சடலத்தைக் கைப்பற்றி, தாடிக்கொம்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பொ. ஆறுமுகம் (35) மற்றும் திண்டுக்கல் ஆர்எம். காலனியை சேர்ந்த போ. அய்யப்பன் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து நவரத்தினத்தை கொலை செய்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆறுமுகம் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை வழக்கில் தொடர்புடைய ஆறுமுகம் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, கூடுதல் அமர்வு நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.