உற்பத்தி குறைவால் பூவன் பழத்துக்கு தட்டுப்பாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூஜைக்குத் தேவையான பூவன் பழம் உற்பத்தி குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், முதன்முறையாக ஆந்திரா பழங்கள் திண்டுக்கல்லில் விற்பனைக்கு வந்துள்ளன

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூஜைக்குத் தேவையான பூவன் பழம் உற்பத்தி குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், முதன்முறையாக ஆந்திரா பழங்கள் திண்டுக்கல்லில் விற்பனைக்கு வந்துள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் குலை, கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகள் ஆகியன முக்கியத்துவம் பெறுவதைப் போல், பூஜைக்கு பூவன் பழங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில், மக்கள் விரும்பி உண்ணும் கற்பூர வள்ளி, நாட்டு வாழை, ரஸ்தாலி, மலை வாழை, செவ்வாழை போன்ற வாழை ரகங்களே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
கதளி எனப்படும் பூவன் பழம் பெரும்பாலும் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதால், இந்த ரக வாழைகளை சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால், உற்பத்தி குறைந்த பூவன் பழம் சந்தைக்கு குறைந்த அளவிலேயே வந்திறங்கின. பொங்கல் பண்டிகையின்போது பூஜைக்கு பூவன் பழம் அவசியம் என்பதால், பூவன் வாழைத்தார்களுக்கு கடந்த 2 நாள்களாக அதிக வரவேற்பு இருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பூவன் பழம் அதிக அளவில் வருவது வழக்கம். ஆனால், திருச்சி பகுதியிலிருந்து பூவன் காய்களின் வரத்து குறைந்ததால், தூத்துக்குடி பகுதியிலிருந்து காய்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முயற்சித்தனர். ஆனாலும், சாகுபடி குறைவால் தேவையானகாய்கள் கிடைக்கவில்லை.
எனவே, ஆந்திரத்திலிருந்து காய்களை கொள்முதல் செய்தனர். அந்த காய்கள் வெள்ளிக்கிழமை இரவு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தன.
வழக்கமாக ரூ. 2-க்கு விற்பனை செய்யப்பட்ட பூவன் பழம், சனிக்கிழமை ரூ. 4 முதல் ரூ. 5 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும், அனைத்து இடங்களிலும் பூவன் பழம் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இது தொடர்பாக பழ வியாபாரி ஏ. சையது இப்ராஹீம் கூறியதாவது:
திண்டுக்கல் சிறுமலை செட் சந்தையில் ஒரு பூவன் தார் ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. உற்பத்தி குறைவால் 300 தார்கள் மட்டுமே கடந்த 2 நாள்களுக்கு முன்பு வந்தன. அதேபோல், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பூவன் தார் வரத்து இல்லை. இதனால், ஆந்திர மாநிலத்திலிருந்து பூவன் பழங்கள் இந்த முறை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திரத்தில் கிலோ ரூ.30-க்கு பூவன் காய்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு தார் சராசரியாக 35 கிலோ எடை இருக்கும். அந்த வகையில் ஒரு தார் ரூ.1000 முதல் ரூ.1,100 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆந்திரத்திலிருந்து பூவன் பழம் கொள்முதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com