கொடைக்கானலில் சுற்றுலாத் துறை சார்பில் நாளை பொங்கல் விழா

கொடைக்கானலில் சுற்றுலாத்துறை சார்பில் ஜன. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் விழா நடைபெறும் என சுற்றுலாத்துறை அலுவலர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

கொடைக்கானலில் சுற்றுலாத்துறை சார்பில் ஜன. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் விழா நடைபெறும் என சுற்றுலாத்துறை அலுவலர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சுற்றுலாஇடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படும். இந்தாண்டு சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜன. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் மாவட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இதில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். இதில் வெளிநாட்டவர்கள் மற்றும் ஆதிவாசிகள், பழங்குடியினர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலாத்துறையினர் செய்து வருகின்றனர்.
மேலும் கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாத்துறையின் சார்பில் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களான "ஃ"பைன் பாரஸ்ட், அப்பர்லேக் வியூ, மோயர்பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக ரூ. 7 கோடி செலவில் வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்க திட்டம் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் மேல்மலைக் கிராமமான மன்னவனூர் பகுதியில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் கூடுதலாக பரிசல் இயக்குவதற்கும் ஏரியின் அழகை சுற்றிப்பார்க்கவும் பேட்டரி கார் உள்ளிட்டவைகள் அமைப்பதற்கு ரூ.3 கோடியே 35-லட்சம் செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காகவும் சுற்றுலாத்துறையின் சார்பில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார். அப்போது உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்த் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com