திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில், புகையில்லா பொங்கல் விழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் வீடுவீடாகச் சென்று பழைய பொருள்களை எரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பேரூராட்சி செயல் அலுவலர் சி. கமர்தீன் செய்திருந்தார்.
நத்தம்: நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் விழா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, பேச்சு, கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தலைமையாசிரியை சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எரியோடு: எரியோடு பேரூராட்சி சார்பில், புகையில்லா பொங்கல் விழா எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் எம்.ராஜசேகர் பரிசுகளை வழங்கினார்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்துள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் இளைஞர் எழுச்சித் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு எஸ்எஸ்எம் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சி.கந்தசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் கலந்துகொண்டார். விழாவில், உறியடித்தல், கோலப் போட்டி, நெருப்பின்றி சமைத்தல், புதையல் வேட்டை, இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் பரிசுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, எஸ்எஸ்எம் கல்வி குழுமத்தின் முதல் செய்தி இதழ் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், எஸ்எஸ்எம் கல்வி குழும செயல் இயக்குநர் க.சண்முகவேல், வளாக இயக்குநர் இரா. சந்திரன், முதல்வர் மு.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக வளாகத்தில் வியாழக்கிழமை மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், பல்கலைக் கழகப் பேராசிரியைகள், நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல், கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை கல்லூரி மாணவர்கள் அழைத்து வந்து, அவர்களுக்கு முதல் மரியாதை செய்தனர். அதன் பின், கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com