ஜல்லிக்கட்டு பார்க்கச் சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி நடிகர் அபிசரவணன் வழங்கினார்

ஜல்லிக்கட்டு பார்க்கச் சென்று காளை முட்டி உயிரிழந்த எமக்கலாபுரம் இளைஞரின் குடும்பத்திற்கு நடிகர் அபிசரவணன் ரூ.1 லட்சம் நிதி உதவியும், ஒரு பசுமாட்டையும் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

ஜல்லிக்கட்டு பார்க்கச் சென்று காளை முட்டி உயிரிழந்த எமக்கலாபுரம் இளைஞரின் குடும்பத்திற்கு நடிகர் அபிசரவணன் ரூ.1 லட்சம் நிதி உதவியும், ஒரு பசுமாட்டையும் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள எமக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (19). கடந்த 15 ஆம் தேதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற  ஜல்லிக்கட்டை காண சென்ற இவர், காளை முட்டியதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு திரைப்பட நடிகர் அபிசரவணன் வெள்ளிக்கிழமை சென்றார். காளிமுத்துவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.1 லட்சத்திற்கான நிதி உதவியும், கன்றுடன் கூடிய ஒரு பசுவையும் வழங்கினார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரமாக களமிறங்கி போராடியவர்களின் நானும் ஒருவன். காளை முட்டி உயிரிழந்த காளிமுத்துவின் தங்கை அன்னகாமு (12) 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி ரூ.1 லட்சத்தை வைப்பு நிதியாக செலுத்தியுள்ளேன். 10 ஆண்டுகளுக்குப் பின் அந்த தொகை கிடைக்கும் வகையில் செலுத்தப்பட்டுள்ளது. 
 அதே போல் காளிமுத்து உயிரிழப்புக்கு காரணமான விலங்கு, அவரது குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், பசுவை வழங்கியுள்ளோம். அன்னகாமுவின் வங்கிக் கணக்கு எண் மற்றும் அவரது செல்லிடப்பேசி எண் எனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தமிழக இளைஞர்கள் உதவி செய்ய விரும்பினால், தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com