பழனி அருகே இயற்கை முறை விவசாயத்தில் 12 அடி உயரம் வளர்ந்த கால்நடை தீவனப்பயிர்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தனியார் பண்ணையில் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட சூப்பர் நேப்பியர் கால்நடைத்தீவனப் பயிர் சுமார் 12 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தனியார் பண்ணையில் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட சூப்பர் நேப்பியர் கால்நடைத்தீவனப் பயிர் சுமார் 12 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.
பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர். பெங்களூரில் கணினி தொழில்நுட்ப வல்லுனரான இவர் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் மிக்கவர்.   இதற்காக பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ராஜன் இயற்கை பண்ணையில் அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்களையும் இணைத்து இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். வேளாண்துறை அதிகாரிகள் பலரும் இவரது சாகுபடி முறைகளை விவசாயிகளை அழைத்து வந்து காட்டி செல்கின்றனர்.   
கடந்த முறை பழங்கால நெற்பயிர் ரகத்தை இயற்கை உரங்களை பயன்படுத்தி சுமார் ஆறு அடி உயரம் வரை வளர்த்து  அறுவடையும் செய்த ஜெய்சங்கர், தற்போது சுமார் 12 அடி உயரத்துக்கு கால்நடை தீவனங்களை வளர்த்து சாதனை செய்துள்ளார்.   "பேங்க்சோங்க்' எனப்படும் 'சூப்பர் நேப்பியர்' கால்நடைத்தீவனத்தை நண்பரிடம் வாங்கி தனது தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்து 12 அடி உயரம் வரை வளர்த்துள்ளார்.  இந்த பயிர் மேலும் மூன்று அடி உயரம் வரை வளரும் எனவும் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து ஜெய்சங்கர் கூறியது: தற்போது கால்நடைகளுக்கு வழங்கப்படும் கோ 4, கோ 5 வகை புல்லுடன் ஒப்பிடும் போது "சூப்பர் நேப்பியர்' மகசூல் மற்றும் புரதச்சத்து இரண்டு மடங்கு அதிகம் உள்ள ரகமாகும்.  இதில் 16 முதல் 18 சதவீதம் வரை புரதச்சத்து உள்ளது. சாதாரண புல் ரகத்தை ஒரு ஏக்கருக்கு பயிரிட்டால் ஆறு மாடுகளும், 20 ஆடுகளும் பராமரிக்கலாம். அதே இடத்தில் சூப்பர் நேப்பியரை சாகுபடி செய்தால் 12 மாடுகளையும், நாற்பது ஆடுகளையும் பராமரிக்கலாம். ஏக்கருக்கு 200 டன் புல் அறுவடை செய்யலாம் என்பதால் தாய்லாந்து நாட்டில் இதை நேப்பியர் புல்களின் ராஜா என அழைக்கின்றனர்.  பால் உற்பத்தியாளர்கள் இதை பயன்படுத்தும் போது அதிகமான பால், அதிகமான புரதச்சத்துடன் கிடைக்கும் என தெரிவித்தார்.  
பண்ணையை பராமரிக்கும் ராமகிருஷ்ணன் கூறியது: பண்ணையில் உள்ள பயிர்களுக்கு வேண்டிய இயற்கை உரத்துக்காக நாட்டு மாடுகள், ஆடுகள், கோழிகள் போன்றவற்றை இங்கேயே வளர்க்கிறோம்.  
இதன் மூலம் பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல் கரைத்து உரமாக பயன்படுத்துகிறோம்.  மேலும் பசுஞ்சாணம், ஆட்டுப்புழுக்கை, கோழிக்குப்பைகளையும் போட்டு வளர்க்கிறோம்.  இந்த செடிக்கு ஸ்பிரிங்கள் மூலம் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டு வளர்த்தோம்.  கரும்புபோல  இரண்டு அடிக்கு, ஒரு கரணை நட்டதில் கரணைக்கு 30 செடிகள் வளர்ந்து மூங்கில் புதர்போல வளர்ந்துள்ளது என தெரிவித்தார்.  
தற்போது அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஜெய்சங்கர் இந்த செடியில் கிடைத்த கரணைகளை ஒரு ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு தருவதாக தெரிவித்தார்.  தொடர்புக்கு 8861282389, 9986960296.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com