ரமலான் பண்டிகை: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்புத் தொழுகை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 85க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 85க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். அதேபோல் பேகம்பூர் ஈத்கா பள்ளிவாசல், நாகல்நகர் பள்ளிவாசல், செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள பள்ளிவாசல், ரவுண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மேலும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியர்களின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
நத்தம்: நத்தம் தெற்குத்தெரு பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட இஸ்லாமியர்கள், பெரிய பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு பள்ளிவாசல்களுக்குச் சென்று பின்னர் ஈத்கா மைதானத்தை அடைந்தனர். இதில், நத்தம் அண்ணா நகர், அசோக் நகர், முஸ்லிம் தெரு, புதுப்பட்டி, மேலமேட்டுப்பட்டி உள்ளிட்ட நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல்: ரமலான் திருநாளை முன்னிட்டு கொடைக்கானல் பேரிபால்ஸ் பகுதியிலுள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் கொடைக்கானல்,பெருமாள்மலை, செண்பகனூர், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகை நடத்தினர். அதன் பின் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஈத்கா மைதானத்திலிருந்து ஏரிச்சாலை, கிளப்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை,கே.சி.எஸ்.திடல் வழியாக டவுன் பள்ளிவாசலை அடைந்தனர். அங்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
வத்தலகுண்டு: வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல், சின்னப்பள்ளி வாசல் உள்பட 4 இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், 300 இஸ்லாமியக் குடும்பங்களுக்கு ரம்ஜான் விருந்து தயாரிப்பதற்கான அனைத்துப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு தமுமுக நகரத் தலைவர் ஷேக்தாவூத், செயலர் அலாவுதீன், மநேம கட்சி நகர செயலர் இம்தீயாஸ் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பழனி: பழனியில் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சண்முகாநதி கொத்வா பள்ளிவாசலுக்கு சென்று சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர். இதை முன்னிட்டு டிஎஸ்பி., முத்துராஜன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் வேடசந்தூர், வேல்வார்கோட்டை, மணக்காட்டூர், பெரியூர்ப்பட்டி, சமுத்திராபட்டி, கோசுகுறிச்சி, சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தி, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com