திண்டுக்கல் அருகே இரண்டரை ஆண்டுகளாக நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடையாதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடையாதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில், எம்விஎம் கல்லூரி அருகே அமைந்துள்ள பழனி ரயில்வே கடவுப் பாதையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்து.
 இப்பணி, கடந்த 2016 ஜனவரி 21ஆம் தேதி தொடங்கியது. ரூ.21 கோடி செலவில் 634 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டவும்,  பாலத்தின் இருபுறங்களிலும் 5.50 மீட்டர் அகலத்தில் அணுகு சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. 
 அதன்படி, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள், துரிதமாக நடைபெற்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பாகவே முடிவடைந்துவிட்டது. ஆனால், ரயில்வே கடவுப் பாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடைபெறாததால், இந்த பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. 
 கடந்த டிசம்பர் 31ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது, இந்த பாலத்துக்கு திறப்பு விழா நடத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் சார்பில் தொடர்ந்து கால தாமதம் ஏற்படுத்தியதால், திறப்பு விழா நடைபெறாமல் போனது. 
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் பிரதான சாலையாகவும், அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் வசித்து வரும் பகுதியாகவும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் கல்லூரி அமைவிடமாகவும் இருந்தபோதிலும், ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை.
 எனவே, இனியாவது மேலும் காலதாமதம் ஏற்படுத்தாமல் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து, ரயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com