திண்டுக்கல் உள்விளையாட்டு அரங்கில் ரூ.1.50 கோடியில் குளிர்சாதன வசதி: அமைச்சர் சி.சீனிவாசன் தகவல்

திண்டுக்கல் மாவட்ட நவீன உள்விளையாட்டு அரங்கில் ரூ.1.50 கோடி செலவில் குளிர்சாதன வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். 

திண்டுக்கல் மாவட்ட நவீன உள்விளையாட்டு அரங்கில் ரூ.1.50 கோடி செலவில் குளிர்சாதன வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். 
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ரூ.4.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கில் முதல்முறையாக மாநில இளையோர் தரவரிசை இறகுப்பந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
 நிகழ்ச்சியில் அமைச்சர்  சீனிவாசன் பேசியதாவது: 
தமிழக அரசு கல்விக்கு இணையாக, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, சர்வதேச, தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகைகள், சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் உள்விளையாட்டு அரங்கம் ரூ.4.23 கோடி செலவில் கட்டப்பட்டாலும், இதில் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ரூ.32.15 லட்சம் பங்களிப்பு செய்துள்ளனர். 
இதுபோல் பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால், விளையாட்டுத் துறையில் பல்வேறு நவீன வசதிகளை மேம்படுத்த முடியும். நவீன உள்விளையாட்டு அரங்கில், ரூ.1.50 கோடி செலவில் குளிர்சாதன வசதியை ஏற்படுத்துவதற்கு  விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 அமைச்சர் பி.பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:
 தமிழகம் முழுவதும் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 12,524 கிராம ஊராட்சிகளில், கிராம விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக ரூ.25  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திறமையான வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து, "சாம்பியன் டெவலப்மெண்ட்' என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு வீரருக்கும் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சிறந்த பயிற்சி பெறுவதற்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
மாவட்ட அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தலா ரூ.1000-ம், மண்டல அளவில் தலா ரூ.5 ஆயிரம், மாநில அளவில் தலா ரூ.1 லட்சம் என பரிசுத்தொகை வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. தற்போது சர்வதேச அளவில் 145 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பயிற்சியாளர்களை ஊக்குவிக்க ரூ.13.5 கோடி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன், கால்பந்து கழகத் தலைவர் கோ.சுந்தராஜன், செயலர் எஸ்.சண்முகம், மாவட்ட இறகுப்பந்து கழகத் தலைவர் இ.என்.பழனிசாமி, செயலர் வி.நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
மாநில இளையோர் தரவரிசைக்கான இறகுப்பந்து போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டி வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com