திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்பாட்டுக்கு வராத 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள்!

ஒருங்கிணை ந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால்,

ஒருங்கிணை ந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், இக்கட்டடங்கள் சமூக விரோதச் செயல்களுக்கு புகலிடமாக மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம், வடமதுரை, குஜிலியம்பாறை, சாணார்பட்டி, ஆத்தூர், வத்தலகுண்டு, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய 8 வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்துக்கான கட்டடம் தலா ரூ. 1.50 கோடி செலவில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதில், குஜிலியம்பாறை, சாணார்பட்டி, வத்தலகுண்டு ஆகிய 3 மையங்கள் வேளாண் பொறியியல் துறை சார்பிலும், மீதமுள்ள 5 மையங்கள் பொதுப்பணித் துறை மூலமாகவும் கட்டப்பட்டுள்ளன.
வேளாண்மை, தோட்டக்கலை, விதை ஆய்வகம், வேளாண் பொறியியல் உள்ளிட்ட வேளாண்மைத் துறை தொடர்பான அனைத்து அலுவலகங்களும் ஒரே  பகுதியில் இருப்பதால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விரிவாக்க மையங்களுக்கான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. 
கட்டுமானத்துக்கு ரூ.1.35 கோடியும், கூட்ட அரங்கு மற்றும் அலுவலகத்துக்கான மரச் சாமான்கள், குளிரூட்டும் வசதி, ஒலிபெருக்கி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ.15 லட்சம் வீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளை மட்டுமே மேற்கொண்டுள்ள பொதுப்பணித் துறையினர் ரூ.15 லட்சம் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கட்டுமானத்துக்கே முழு ஒதுக்கீடும் செலவாகிவிட்டதாகவும், உள்கட்டமைப்பு வசதிகளை வேளாண்மைத் துறையினரே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் பொதுப்பணித் துறையினர் கூறி வருகின்றனர். இதனால், விரிவாக்க மைய கட்டடங்களை பெற்றுக் கொள்ளாமல்  வேளாண் அலுவலர்கள் காலம் கடத்தி வருகின்றனர்.
  அதேபோல், வேளாண் பொறியியல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள குஜிலியம்பாறை, சாணார்பட்டி, வத்தலகுண்டு விரிவாக்க மையங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாததால், இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த மையங்களை பொருத்தவரை, உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான பொருள்களை கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு கட்டாயப்படுத்துவதாக அதிகாரிகள்  புலம்புகின்றனர். கணக்கு தணிக்கையின்போது, அதிகாரிகள் மட்டுமே சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்பதால், வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் கட்டி முடிக்கப்பட்டும் கடந்த 6 முதல் 10 மாதங்களாக ஒருங்கிணைந்த வேளாண் மையங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. மேலும், அங்குள்ள ஜன்னல், தரைத் தளங்கள் சேதமடைந்து வருகின்றன. இரவு நேரங்களில், சிலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கான களமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் அலைக்கழிப்பை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறியது: பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 5 மையங்களில் ரூ.15 லட்சத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் மட்டுமே கட்டடங்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துவிட்டோம்.
இந்த பிரச்னை தொடர்பாக பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், தீர்வு ஏற்படாமல் கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை  உள்ளது. எனினும், வேளாண் பொறியியல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com