திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலை திட்டம்: 14 கிராமங்களுக்கு பாதிப்பில்லாமல் நிறைவேற்ற வலியுறுத்தல்

திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலை திட்டத்தை, திண்டுக்கல் முதல் லக்கையன்கோட்டை வரை 14 கிராமங்களை பாதிக்காத வகையில்

திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலை திட்டத்தை, திண்டுக்கல் முதல் லக்கையன்கோட்டை வரை 14 கிராமங்களை பாதிக்காத வகையில் நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. 
     திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக நில எடுப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் முதல் ஒட்டன்சத்திரம் வரையிலான பகுதியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை அறிந்த அப்பகுதியினர், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி தலைமையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்தனர். 
 இதுதொடர்பாக ஐ.பெரியசாமி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் இரா.சச்சிதானந்தம் ஆகியோர் கூறியதாவது:
 திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், திண்டுக்கல் முதல் லக்கையன்கோட்டை வரையிலான 23 கி.மீ. சாலைக்காக, குடியிருப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், பாலம் ராஜாக்காப்பட்டி, இடையப்பட்டி, முத்தனம்பட்டி, கதிரையன்குளம், ரெட்டியார்சத்திரம், செம்மடைப்பட்டி, பலக்கனூத்து, புதுச்சத்திரம், லக்கையன்கோட்டை ஆகிய 14 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 7 இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகள் முழுமையாக பாதிக்கப்படும். 
  ஆனால், லக்கையன்கோட்டை முதல் பழனி தாளையம் வரை 100 கி.மீ. நீள சாலை ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, பழனி, ஏ.கலையம்புத்தூர், சின்னக்கலையம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற நிலையை, திண்டுக்கல் முதல் லக்கையன்கோட்டை வரையிலும் ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள், தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தவிர்த்து, பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com