கொடைக்கானலில் குண்டாறு திட்டப் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும்: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர்

கொடைக்கானலில் நடைபெற்று வரும் குண்டாறு திட்டப் பணிகள், டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும்

கொடைக்கானலில் நடைபெற்று வரும் குண்டாறு திட்டப் பணிகள், டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என, சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் செம்மலை வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
      தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் செம்மலை தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகம், பாண்டியன், செந்தில்குமார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செழியன், பிச்சாண்டி, நல்லதம்பி ஆகியோர், கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தனர். இவர்களை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வரவேற்றார். இக் குழுவினர், கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான குடிநீர்த் தேக்கத்தைப் பார்வையிட்டனர்.
    பின்னர், குண்டாறு திட்டம் சார்பில் நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, அப்சர்வேட்டரியிலுள்ள ரோஜா தோட்டத்துக்குச் சென்ற குழுவினர், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். பின்னர், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர். அங்கு, கட்டமைப்புப் பணிகள் குறித்தும், சி.டி. ஸ்கேன் அமைப்பது குறித்தும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
     இது குறித்து குழுத் தலைவர் செம்மலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொடைக்கானலில் உள்ள குடிநீர்த் தேக்கத்தில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக ரூ. 10 கோடி செலவில் நீர்த்தேக்கம் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர்த் தேக்கத்திலிருந்து வெளியேறும் தண்ணீரை சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை விரைவில் சரிசெய்யப்படும்.
      ரூ. 41 கோடி செலவில் நடைபெற்று வரும் குண்டாறு திட்டப் பணிகள் 60-சதவீதம் முடிவடைந்துள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து, கொடைக்கானல் பகுதியிலுள்ள ஒவ்வொருவருக்கும் 135 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
    கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலிப் பணியிடங்களில் பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்படும் அப்சர்வேட்டரியிலுள்ள ரோஜா தோட்டப் பணிகள் விரைவில் விரைவில் முழுமை பெறும்என்றார். 
    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் ராஜசேகரன், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மாலதி, கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com