வரதமாநதி அணைப் பூங்காவை பராமரிக்க கோரிக்கை

பழனியை அடுத்த வரதமாநதி அணைக்கட்டில் உள்ள சிறுவர்கள் பூங்கா பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. 

பழனியை அடுத்த வரதமாநதி அணைக்கட்டில் உள்ள சிறுவர்கள் பூங்கா பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. 
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ளது வரதமாநதி அணைக்கட்டு.  மாவட்டத்தின் சிறிய அணையான இது, பழனி - கொடைக்கானல் பிரதான சாலையில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனால், இந்த அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் வந்து செல்கின்றனர். இந்த அணையில், வறட்சி காலத்திலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இந்த அணையில் போதிய பராமரிப்பு இல்லாததாலும், பாதுகாவலர்கள் இல்லாததாலும், அணையின் உள்பகுதியில் உள்ள பூங்கா சேதமடைந்து வருகிறது. இங்கு, பகல் நேரங்களிலும் பலர் மது அருந்தி பாட்டில்களை தூக்கி 
வீசுவது சகஜமாக நடைபெறுகிறது. 
இதனால், சுற்றுப்புறச்சூழல் கெடுவதுடன், பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படும் நிலை உள்ளது.  மேலும், மது போதையில் குழந்தைகள் விளையாடும் ராட்டிணம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகின்றனர். அணையில் உள்ள விருந்தினர் மாளிகையின் கதவுகளை உடைத்து, மதுக்கூடமாக மாற்றி வருகின்றனர். பூங்காவில் குழந்தைகள் விளையாடும் சறுக்கல், சிமென்ட் இருக்கைகள் சேதமடைந்து வருவதுடன், பூங்காவும் பொலிவிழந்து வருகிறது.
எனவே, பொதுப்பணித் துறையினர் அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன்,  பூங்காவையும், விளையாட்டு உபகரணங்களையும் பராமரித்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அழகுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com