கொடைக்கானல் புலியூர் பகுதியில் காட்டு யானைகள் மீண்டும் முகாம்:  பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் அருகே புலியூர் பகுதியில் காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை  இரவு மீண்டும் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொடைக்கானல் அருகே புலியூர் பகுதியில் காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை  இரவு மீண்டும் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை, உப்புப்பாறை மெத்து, பி.எல்.செட், புலியூர் போன்ற பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு, யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்தன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பாதுகாப்புக் கருதி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
  அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களுடன் சேர்ந்து, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
 இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, புலியூர் பகுதி விவசாய நிலங்களில் காட்டு யானைகள் மீண்டும் முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தோட்டத்துக்கு காவலுக்கு செல்ல முடியவில்லை.
 மேலும் வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாத நிலையிலும், பொதுமக்கள் வெளியே செல்வதற்கும் அச்சமடைந்துள்ளனர்.
 எனவே, புலியூர் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரங்களில் நல்ல வெயில் நிலவியது. இதனால் வனப் பகுதிகளிலுள்ள நீரோடைகளில் தண்ணீர்வரத்து குறைந்துள்ளது. அதையடுத்து, உணவு தேடி யானைகள் ஊருக்குள் வந்துள்ளன. யானைகள் நடமாட்டம் வழக்கமானதுதான். இருப்பினும் யானைகள் வரும் வழித்தடங்களில் பொது மக்கள் யாரும் செல்ல வேண்டாம்.
 யானைகள் நடமாடுவதை கண்டால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். வனத்துறையினர், வனக்குழுவினர் உதவியுடன் காட்டு யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com