திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு பழனியிலிருந்து 10 டன் மலர்கள் அனுப்பும் பணி தொடக்கம்

பழனியில் இருந்து திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு சுமார் 10 டன்  மலர்கள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

பழனியில் இருந்து திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு சுமார் 10 டன்  மலர்கள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
   திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை (செப்.13) முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் 16 ஆவது ஆண்டாக வண்ண மலர்கள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது. பழனி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு சபா தலைவர் ஹரிஹரமுத்து தலைமை வகித்தார். செயலர் மருதசாமி முன்னிலை வகித்தார். 
 பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மலர்கள் அனுப்பும் பணியை தொடக்கி வைத்தனர்.
   முதல் நாளான செவ்வாய்க்கிழமை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு செண்டுமல்லி, வாடா மல்லி, பட்டுப்பூ, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் சுமார் ஒரு டன் அளவிற்கு கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உபயமாக அனுப்பப்பட்டது. 
 வரும் நாள்களில் நாள்தோறும் ஒரு டன் என 10 நாள்களுக்கு  10 டன் தாமரை, அரளி, மருகு, மரிக்கொழுந்து, செண்டு மல்லி, பட்டுப்பூ, துளசி, தாமரை, வாடாமல்லி மலர்கள் அனுப்பப்படவுள்ளது.  
 இதுகுறித்து சபா செயலர் மருதசாமி கூறியது: திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி புறப்பாடு, சுவாமி அலங்காரம், மலர் தோரணம் போன்ற நிகழ்ச்சிக்கு பல ஆயிரம் எடையிலான மலர்கள் தேவைப்படுகிறது. 
 ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்துக்கு முதல் நாளன்று மலர்கள் அனுப்பப்படும். முன்பு பழனியில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் பூக்கள் கட்டணமின்றி கொண்டு செல்லப்படும். 
 தற்போது அந்த பேருந்து இயக்கப்படாத நிலையில் திண்டுக்கல்லுக்கு பூக்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருமலை செல்லும் பேருந்தில் கட்டணமின்றி கொண்டு செல்லப்படுகிறது. ஆகவே, பழனியில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தை ஆந்திர மாநில அரசு இயக்க வேண்டும் என்றார்.  
அடுத்த பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அக்.18 ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.  இச்சேவையில் பங்கேற்க விரும்புவோர் 94434-03026 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். 
 நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் முருகேசன், கவுரவ தலைவர் சின்னசாமி, நிர்வாக்குழு உறுப்பினர்கள் கண்ணன், சிற்றம்பலநடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com