தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.66ஆயிரம் பரிசு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றல் போட்டிகளில் வெற்றி பெற்ற

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றல் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 66 ஆயிரம் பரிசுத் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
      திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவர்களிடையே தமிழில் படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை மேம்படுத்தும் நோக்கில், கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்  நடத்தப்பட்டன. இப்போட்டிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் பெ. சந்திரா முன்னிலையில் நடைபெற்றன.
    தன்னிகரில்லா தமிழ் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், உனக்குள் நீ என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், வெல்லட்டும் தமிழ், காஞ்சித் தலைவன், மறைமலையடிகள் உள்ளிட்ட 16 தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. 
   இதில், கவிதைப் போட்டியில் சு. மங்கையர்க்கரசி (மீனாட்சி கல்வியியல் கல்லூரி), ஆ. ரம்யா (என்பிஆர் கலைக் கல்லூரி), பா. பிரியதர்ஷினி (மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
    கட்டுரைப் போட்டியில், ச. சத்யவாணி (எம்விஎம் அரசு மகளிர் கல்லூரி), இரா. ஹரிஹரன் (ஜி.டி.என். கல்லூரி), மு. ஷிபானா (அனுகிரஹா சமூகவியல் கல்லூரி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
    பேச்சுப் போட்டியில், ஆ. விக்னேஷ் (பழனியாண்டவர் கலைக் கல்லூரி), இரா. விஷ்வா (ஜிடிஎன் கல்லூரி), ச. சுரேன் (அனுகிரஹா சமூகவியல் கல்லூரி) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.  
    முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.7ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் ரூ. 66ஆயிரத்துக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பரிசுத் தொகையினை, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் பெ. சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆ. ராஜ்குமார், கொடைக்கானல் கோட்டாட்சியர்  மோகன் ஆகியோர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com