நீர் மேலாண்மைக்கு  வழிகாட்டும்  கிராம மக்கள்!

நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் 26 ஏக்கர் பரப்பிலான குளத்தை தூர்வாரி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ள

நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் 26 ஏக்கர் பரப்பிலான குளத்தை தூர்வாரி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ள குட்டத்துப்பட்டி கிராம மக்கள், கிராமத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். 
     திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிரந்தர பிரச்னையாக நீடிப்பது தண்ணீர் பற்றாக்குறை. ஆண்டுதோறும் குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டத்தால், இம்மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றிலிருந்து மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வந்தாலும், ரெட்டியார்சத்திரம் பகுதியிலுள்ள பல கிராமங்கள் அத்திட்டத்தில் இடம்பெறவில்லை.
    அதில் ஒன்றாக, திண்டுக்கல் அடுத்துள்ள குட்டத்துப்பட்டி கிராமமும் இருந்து வருகிறது. இந்த கிராமத்தினர் கடந்த பல ஆண்டுகளாக குடிநீருக்காக அருகிலுள்ள தோட்டங்களில் தஞ்சமடைந்து வந்த நிலையில், ஒரு பாதிரியாரின் வழிகாட்டுதலோடு நீர்மேலாண்மைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர்.  
   மதுரையைச் சேர்ந்த அந்தோணி ராஜா, குட்டத்துப்பட்டி பங்கு பாதிரியாராக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அன்றைய சூழலில்,  குட்டத்துப்பட்டி கிராமத்தின் பிரதான தேவை குடிநீர் என்பதை உணர்ந்த அந்தோணி ராஜா,  நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த கிராமத்தில் வறண்டு கிடந்த 35 அடி ஆழ கிணற்றை தூர்வாரத் தொடங்கி, பின்னர் மேலும் 35 அடிக்கு ஆழப்படுத்தும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
     இதை, குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொண்டு, 70 அடி ஆழமுள்ள கிணறாக மாற்றியுள்ளனர். மேலும், கிராமத்தில் மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில், குடிநீர் கிணற்றின் அருகிலேயே உறிஞ்சி குழியும் அமைத்துள்ளனர். 
   இதன்மூலம், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ள குட்டத்துப்பட்டி கிராம மக்கள், தற்போது அங்குள்ள 26 ஏக்கர் பரப்பிலான குளத்தை  தூர்வாரத் தொடங்கியுள்ளனர்.  இதற்கும் பாதிரியார் அந்தோணி ராஜா வழிகாட்டி வருவதாகவும் குட்டத்துப்பட்டி கிராம மக்கள் கூறுகின்றனர். 
     இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரெங்கம்மாள் என்பவர் கூறியது: சீமைக் கருவேல மரங்கள் நிறைந்து, தூர்ந்து கிடந்த குளத்தை சீரமைக்கும் முயற்சியில், சாதி மத வேறுபாடுகளை கடந்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கி, குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு சமையல் செய்து கொடுத்துள்ளோம். 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளும் முழுமையான ஈடுபாட்டுடன் பணிபுரிந்துள்ளனர்.
    இதனால், 20 நாள்களாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மழை பெய்து இந்த  குளம் நிரம்பினால், குட்டத்துப்பட்டி பகுதியில் நிலத்தடி நீராதாரம் பெருகி, வேளாண்மைத் தொழிலை சிறப்பாக செய்யமுடியும் என்றார்.
    இது குறித்து பாதிரியார் அந்தோணி ராஜா கூறியது: அனைத்து தேவைகளுக்கும் அரசு நிர்வாகத்தை சார்ந்திருப்பதை விட, நமக்கு நாமே என்ற சிந்தனையோடு களமிறங்கியதால், குடிநீர் பிரச்னைக்கு குட்டத்துப்பட்டி மக்கள் தீர்வு கண்டுள்ளனர். அதே ஊக்கத்தோடு தற்போது குளம் தூர்வாரும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 
    தற்போது வரை ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளோம். திண்டுக்கல் மதர் தெரசா அரிமா சங்கம் சார்பில் பொக்லைன் இயந்திரம் வழங்கியதோடு, பொருளாதார உதவியும் அளித்துள்ளனர். அதேபோல், ஒரு தனியார் கல்லூரியும் ரூ. 20 ஆயிரம் அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை பொதுமக்களே பகிர்ந்தளித்துள்ளனர். 
    இந்த கிராமத்தை போல் பிற கிராமங்களும் நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க முன் வரவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com